Friday, January 5, 2024

"அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்,

சண்டை போட்டுக் கொண்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன் காத்திருக்கிறேன் 
என் முறை வருமென்று"
கனிமொழியின் கவிதை ..
..
கனிமொழி கருணாநிதி ..
எளிமையான அணுகுமுறை, எதற்கும் அஞ்சா துணிச்சல்,கொள்கை தெளிவு, அரசியல் புரிதல், நேர்பட பேசும் ஒழுங்கு, தலைச்சிறந்த தலைவரின் மகள் என்ற அகந்தையில்லாமை , தலைமைக்கு கட்டுப்படும் பண்பு, கனிவான பார்வை, எதிரிகளை இன்முகத்தோடு அடித்தமர்த்தும் ஆளுமை என தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.. கனிவு,திடம், மனவலிமை,முற்போக்கு சிந்தனை இவையனைத்தும் கொண்ட பகுத்தறிவாளர் கனிமொழி.. 
..
கலைஞர் தன் இலக்கிய வாரிசு என சொன்னவர் அரசியலில்  "கவிஞர்" கனிமொழி கருணாநிதி என விளித்து அறிமுகம் செய்தார் 
அரசியலில் இலக்கியமாய் திகழ்கிறார் கனிமொழி.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முதல்முறை மாநிலங்களவைக்கு சென்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக வேண்டும் மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற வேண்டும் என தூத்துக்குடியை தேர்வு செய்து மக்களோடு கலந்தார்.. 
..
தன் தொகுதி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்வதும் இந்த பேரிடரில் நான் இருக்கிறேன் நம்பிக்கையை தந்ததும் மூழ்கும் நிலை வந்தாலும் நானும் வருவேன் என தண்ணீரில் இறங்கி நிவாரணப்பணிகளை செய்து நன்மதிப்பை பெற்றார்..
கலைஞரின் குணத்தை கண்டேன் 
உயர்சாதியினருக்கான பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசிய தோழர் ரங்கராஜனுக்கு எதிராய் சினம் கொண்டு நின்ற போது போராளியாய் காட்சிதந்த போது பெரியாரின் பெயர்த்தியை கண்டேன்..
..
சிறந்த சனநாயகவாதியாக, பேச்சில் நாகரீகமும்,நயமும் பழுத்த அரசியல்வாதியைப் போல நேர்த்தியாக அதேவேளை கொள்கை உறுதியோடு மக்கள் நலன் சார்ந்து இனம் மொழி கலை பண்பாட்டில் நின்று முரசொலிக்கும் மங்கை.. பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கேள்வி கேட்க தவறியதில்லை.. சமைப்பீர்களா  என கேட்டவரை நோக்கி 
ஏன் இந்த கேள்வியை ஆண்களை பார்த்து கேட்பதில்லை அப்பாவை (கலைஞர்) பார்த்து, என் அண்ணனை பார்த்து கேட்பதில்லை என தைரியமாக பெண்ணியம் பேசிய பெருமைக்குரியவர் ..
..
மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாய், மக்கள் பிரச்சனையில் வாதிட தயங்காதவர், சிரித்துக் கொண்டே செம்மட்டியடி அடிப்பதில் அப்பனைப்போல.. அரசியலில் இன்னமும் பெண்களுக்கு போதிய அங்கீகாரம், அதிகாரம் கிடைக்கவில்லை என்பதறிந்து 
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், திராவிடம் பேசும் இயக்கங்கள்  கூட இன்னமும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம், அதிகாரத்தை அலங்கரிக்க செய்யவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.. வாய்ப்பு கிடைக்கும் ஒருசிலரையும் "ஆண்" வழி நடத்தும் நிலை மாற வேண்டும்.. 
..
கனிமொழி இயக்கத்தின் மிக முக்கிய பொறுப்புகளை அடைய வேண்டும்.. 
காலம் கனியும் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 
கனிமொழி 
Kanimozhi Karunanidhi 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, January 4, 2024

பெண்கள் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுங்கள்..பெரியார்
அதோடு நிற்கவில்லை உங்கள் ஆண் குழந்தைகளை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுஙகள் அதற்காக வசதி உங்களூரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார்..
..
பெரியார் வழிதோன்றல்கள் பெண்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள்..  முதலில் எட்டாவது வரை படி திருமண நிதி தருகிறேன்.. பிறகு 12 வது வரை படி .. கல்லூரிக்கு வா கட்டணமில்லா கல்வி தருகிறேன் என்றவர்கள் இதோ மாதாமாதம் ₹1000 கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கதொகை என விரிவுபடுத்தி  பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்தார்கள் .. பெரியாரின் நேரடி சீடன் கலைஞர் எனும் பேரருளாளனின் சிந்தையில் செயலில் நடந்ததுதான்  இவையெல்லாம்..இன்று பெண் குழந்தைகள் பெரியளவில் பட்டம் பெற காரணம்,தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநில திகழ காரணம் திராவிடத்தின் ஆட்சி..
.. 
உண்மையில் இன்று பெரியாருக்கு ஜே என கத்தியிருக்க வேண்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன் .. அவர் சுயமரியாதையோடு வலம் வர காரணமானவர் திராவிட ஆசான் பெரியார் தான்.. இல்லையெனில் வடமாநிலங்களை போல கட்டிவைத்திருப்பார்கள்.. தெருவில் நடமாட விடமாட்டார்கள் .. தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்தை மானத்தை மரியாதையை பெற்று தந்திருக்கிறது அதற்கு முழுமுதல் காரணம் தந்தை பெரியார் ..
..
இன்றைய பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாண்பமை இந்திய ஒன்றிய பிரதமர் கலந்துக்கொணடு தமிழ் நாட்டின் பெண்கல்வி புரட்சியை கண்டிருப்பார்.. இதில் குறிப்பிடத்தக்க விடயம் இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பட்டம் பெற்றார்கள் அவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தனர்.. இங்கே கட்டுபாடுகள் என்ற பெயரில் மத துவேசம் இல்லை அவரவர் கோட்பாடுகளை பின்பற்றலாம் அதற்கு இடைஞ்சல் தருவது அரசின் வேலையில்லை..
..
குறிப்பாக முஸ்லிம் சமுகத்தில் பெண்களின் கல்வி பல்வேறு காரணங்களை காட்டி அடிப்படைவாதிகளால் மறைமுக தடை செய்தும் கணிசமான அளவில் பெண்குழந்தைகள் உயர்கல்வி பெறுவது நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.. எல்லா சமூகங்களிலும் பெண்கல்வி குறித்த தாழ்வுநிலை இருந்தாலும் அதையெல்லாம் மீறி பெண் குழந்தைகள் உயர்கல்வியை நோக்கி வர தொடங்கியிருப்பதற்கு திராவிட அரசுகளின் பங்கு கணிசமானது .. இதெல்லாம் தெரிந்தும் சிலர் திராவிடம் என்ன செய்தது என சொரிந்துக் கொள்கிறார்கள்..
..
பெண்களைப் பற்றி 
"நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப் போல" .. பாரதிதாசன் சொல்வார்.. 
..
பெண்ணே!
உயர பற உலகம் உனது
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, December 28, 2023

விஜயகாந்த் 
இவரைப் பற்றி பேச துவங்கினாலே இப்ராகிம் ராவுத்தர் ஞாபகம் வருகிறது .. மதுரையில் ரைஸ்மில்லை பாரத்துக்கொண்டிருந்தவரை சினிமா ஆசையை அறிந்து சென்னை அழைத்த வந்தவர்..
..
ஆரமபகாலங்களில் அவரை கேலிசெய்தவர்களின் அலுவலகம் சென்று சண்டை போட்டவர்.. நடித்தால் கதாநாயகனாக நடி என இல்லையென்றால் வேண்டாம் என்றவர்.. விஜயகாந்த் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த போது ராவுத்தர் பிலிம்ஸ்  என்ற கம்பெனியை உருவாக்கி வெற்றி படங்களை தந்தவர் .. அன்றைக்கு கும்பகோணம் யூகிசேது வின் தந்தையிடம் பைனான்ஸ் பெற்று படங்களை தயாரித்தார் விஜயகாந்திற்காக தானே பைனான்ஸ் கம்பெனியில் கடனுக்கு கையெழுத்திட்டு பணம் பெற்று புதிய இயக்குனர்களை கொண்டு வெற்றி படங்களை தந்து விஜயகாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ..  நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய மனிதர் தனக்கு கல்யாணம் ஆனால் விஜயகாந்தை பிரிய நேரிடுமோ என கல்யாணம் செய்தக் கொள்ளாதவர் இப்ராகிம்
..
ராவுத்தர் பிலிம்ஸில் தினமும் சாப்பாடு போட்டார், வெள்ளிக்கிழமை பிரியாணி என வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டவர் இதெல்லாம் ராவுத்தர் பிரிவதற்கு முன்பு வரை நடந்தது.. தனக்கான வாழாமல் தன் நண்பனுக்காக வாழ்ந்தவர்
கடைசி காலத்தில் நோயின் பிடியில் இருந்த போது கூட விஜயகாந்த் அருகில் வைத்துக்கொள்ளவில்லை..  விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முதன்மை காரணமானவர் ,
விஜயகாந்த் வாழ்வில் ஒளியேற்றியவர் இப்ராகிம் ராவுத்தர்  ஏனோ இந்நாளில் நினைவில் வந்தார் 
..
ஆலஞ்சியார்

Tuesday, December 26, 2023

இஸ்லாமிய சமுதாய பாதுகாவலர் எடப்பாடிக்கு வாழ்த்துகள் .. SDPI அரசியல் கட்சி அது தனக்கு வேண்டியவர்களோடு கூட்டணியமைக்க அதற்கு உரிமையுண்டு .. சமுதாயத்தை காப்பாற்றுகிற பணியில் தங்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என கருதி "பாதுகாவலன்"  பட்டத்தை எடப்பாடிக்கும் தரும் அந்த பெரிய மனதை பாராட்டாமல் போனாலும் வசைபாட கூடாது ..
..
SDPI பிழைப்புவாத இயக்கம் சமுதாய இளைஞர்களை வழக்கெடுக்கும் வேலைகளில் தன்னை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டு பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கும் வேலைகளில் எஜமானர்களின் சொல்லுக்கு ஆடும் விசுவாசமான எடுபடிகள்.. தலைமை எடுபடி எடப்பாடியை கொண்டாடாமல் போனால் தான் வியப்பு வரும்..  இஸ்லாமிய சமுதாயத்தைப் போல பரிதாபகரமான சமுதாயம் வேறெதும் இல்லை .. தடுக்கி விழுந்தால் தலைவன் அவன் வழியில் கொஞ்சமும் சிந்திக்காமல் ஒரு கூட்டம், ஏன் இப்படி என யாரும் கவலைக் கொள்வதில்லை ..
..
தங்களுக்கென ஒரு தலைவனை தேர்வு செய்ய முடியாமல் அதிகாரம்,பதவி தானென்ற மிதப்பில் "திரியும்" சிலரை தங்கள் சமுதாயத்தை காக்க வந்த "தெய்வமாய்" நினைத்து இளைஞர்கள் வழிகேட்டில் நிற்கிறார்கள்.. IUML ன் அலட்சியபோக்கு 
 குறிப்பாக தமிழகத்தில் இரு இலக்கங்களை தாண்டி "அமைப்புகள்" .. எல்லோருக்கும் சுயநலம் , தனக்கு கைதட்ட சிலர் இருந்தால் போதும் தலைவனாகிவிடலாம் .. பரிதாபம் தோன்றுகிறது ..
..
சிறைவாசிகளை விடுதலைச் செய்யவில்லை அதனால் அதிமுகவிற்கு ஆதரவு தருகிறோம் என சிலர் .. எதையும் திமுக சட்டரீதியாக வலுவான நிலையில் செய்யும் ஒரு உதாரணம் போதும் ஆந்திராவில் அவசரகதியில் கொண்டுவந்த இட ஒதுக்கீடடை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது அதை காரணம் காட்டி ஜெயலலிதா முதல் பார்ப்பன ஊடகங்கள் தமிழகத்திலும் இட ஒதுக்கீடு வராது வந்தாலும் ரத்தாகும் என புலம்பினர் .. கலைஞர் மிக தெளிவாக  சட்டவல்லுநர்களிடம் ஆலோசித்து பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் பரிந்துரைப் பெற்று 7.5%விழுக்காடுக்குமேல் போக கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இஸ்லாமிய கிருத்துவ சமுதாயத்திற்கு தலா 3.5% எனவும் ஜெயின் சமுதாய மக்களுக்கு 0.5%  விழுக்காடும் தந்தார் வழக்கம் போல் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தை நாடினர் ஆனால் உச்சநீதிமன்றம் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஏற்று உள் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது எடுத்தேன் கவிழ்த்தேன் என இல்லாமல் சரியான பாதையில் திமுக செல்லும் என்பதற்கு இந்த உதாரணம் போதும்.. 
..
எனக்கென்னவோ தமிழக இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிமுகதான் சரியெனபடுகிறது ..  CAA  சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அதை செய்யாத அதிமுக சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருப்பது கொடுப்பினை.. தங்களுக்கென ஒரு தலைவனை கண்டறிய  முடியாத சமுகம், சட்டென்று உணர்சசிவயப்படும் சமுகம் நிலைகுலைந்து நிற்கும்.. 
சமுதாயத்தை பிடித்த பீடைகள் விலக காத்திருப்போம் ..
அது என்ன "மதசார்பின்மை"
..
ஆலஞ்சியார்

Monday, December 25, 2023

பொன்முடி ..
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து வருமானவரித்துறை மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்றாண்டு தண்டனையும் 50லட்சம் அபராதம் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது ..
..
உயர்நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது  .. ஆனால் தீர்ப்பில்  உள்ள முரண்கள் கேள்வி எழுப்புகிறது .. வருமானவரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டிருப்பது  அபராதம் 10% விழுக்காட்டிற்கு மேல் இருப்பதும் இங்கே கேள்வி எழுகிறது இரண்டு பேரும் தலா 50 லட்சம் என்பது 1.75 கோடியில் ஏறக்குறைய 60% விழுக்காடு வருகிறது .. 
..
பொன்முடி துணைவியார் விசாலாட்சி அவர்களின் பெயரில் இயங்கும் விஷால் மோட்டார்ஸ் வருடம் ₹5 கோடி வியாபாரம் ஆவதாக வங்கி அதிகாரி சாட்சியம் அளித்திருக்கிறார் .. ஆனால் ₹1.75 அதிக வருவாய் என வருமான வரித்துறை  வழக்கு .. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது என வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள் .. எது எப்படியோ பாஜக தன்னை எதிர்ப்பவர்கள வழக்குகளில் தனிக்கவனம் செலுத்துவதும் வேண்டியவர்களை வைத்து சந்திப்பதும் தொடர்கதையாகிறது..
..
உயர்நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறது .. மேல்முறையீட்டிற்கான அவகாசம் தந்திருக்கிறது .. அலட்சியமாக இல்லாமல் நல்ல வழக்கறிஞர்களை கொண்டு வாதிட்டு இன்னும் திறமையான ஆடிட்டர் ஆலோசனையில் வழக்கை எதிர்க்கொள்ள வேண்டும் ..  இது ஊழல் வழக்காக நீதிமன்றம் கருதாமல் வருமானத்தை மீறிய (சொத்து/பணம்) என தீர்ப்பு   வழங்கியிருப்பதை கருத்தில் கொள்ளவேண்டும் .. இப்படி நிறைய முரண்கள் தீர்ப்பில் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. ஆனாலும் திமுக மீது விழுந்த கரை .. அதை துடைத்து வெளிவரவேண்டியது 
அவசியம்..
..
காத்திருப்போம்
..
ஆலஞ்சியார்

Friday, December 15, 2023

விஜயகாந்த் 
சினிமாக்காரன் .. அதுவரை எந்த குழப்பமும் இல்லை ஆனால்  அரசியல்வாதி ஆவதற்கு அடிப்படை தகுதிகூட இல்லை .. சில முக்கிய காரணிகளே ஒருவரை அரசியல்வாதியாக தீர்மானிக்கிறது .. பொதுநலம், தீர்மானிக்கும் ஆற்றல், எதை எப்படி எதுவரை செய்யவேண்டும், எப்போது ஆடவேண்டும், தன் தகுதி என்ன என்பதை உணர்தல், இவையாவும் இல்லாதவர்..
..
வந்தவர்களுக்கெல்லாம் சோறுபோட்டேன் என்ற மகோராவின் சொல்லின் உண்மையாய் திகழ்ந்தார் அது அவரின் இயல்பாக இருக்கலாம் மீன் சோறு போடுவதல்ல மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டும் அதுதான் பொதுவாழ்வில் பெயர் சிறக்க வழிவகுக்கும்.. அது இருவரிடமும் இல்லை.. அரசியலை புரிந்துக் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது துவக்கத்தில் வெளிச்சம் தரும் அது மின்மினி பூச்சியின் வெளிச்சம் .. அதை உணரவே இல்லை என்பதுதான் கொடுமை..
..
சினிமா மோகம் வாழ்வு தரும் என்பது எழுபது என்பதுகளில் சரி.. ஆனால் இப்போதெல்லாம் உதவாது.. அரசியலில் சில முடிவுகள் குழியில் தள்ளிவிடும் அது நடந்தது.. சோவின் பேச்சை நம்பி ஜெயாவோடு சேர்ந்தது அழிவின் தொடக்கமானது .. அதிலிருந்த மீள பழம் நழுவி பாலில் விழ வாய்ப்பிருந்தது ஆனால் விழுந்தது சகதியில்.. தன் எதிர்காலத்தை சிதைத்த தருணம் அது .. இன்று அரசியலில் கோமாளியாக காட்சியளிக்கிறார்.. கிடைத்தது வரை லாபம் என்ற நிலையிலிருந்து லாபம் கிடைக்க காட்சிப்படுத்தும் பொருளாய் மாற்றிய பெருமை பிரேமலதாவை சாரும்..
.. 
இப்ராகிம் ராவுத்தரோடான நட்பும் பிரிவும் இவர் வாழ்வில் நல்ல பாடத்தை போதித்திருக்கிறது ..  உண்மையில் கேப்டனின் இன்றைய நிலை அவருக்கு ஓய்வு தரவேண்டிய நேரத்தில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து  காட்சிபடுத்தி தன்னை பொதுச்செயலாளராக  முன்னிறுத்தி இனி கேப்டன் இல்லை நான் தான் எல்லாம் என சொல்லியிருக்கிறார் .. பெரிய கட்சியாக வர வேண்டிய தேமுதிக இன்னுமொரு லெட்டர்பேட் "அமைப்பாக" சுருங்குகிறது..  மற்றபடி கேட்பாரற்று கேப்டன் பரிதாபம் 
..
பிரேமலதாவிற்கு வாழ்த்துகள்  
விரைந்து நலம் பெறுக! கேப்டன் !! ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, December 14, 2023

நாடாளுமன்றம் ..  தோற்றுக்கொண்டிருக்கிறது 
பாதுகாப்பு காரணங்கள் மட்டுமல்ல சனநாயகத்தின் குரல்வளை நெறிக்கபடுவதும், ஊழல் பொய் எனும் சொற்களை கண்டு ஆள்பவர்கள் அச்சபடுவதும் விடுதலை இந்தியா மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதை காணமுடிகிறது .. 
..
நாடாளுமன்ற தாக்குதலில் யார் இவர்கள் என பரப்பரப்போடு செயல்பட்ட ஊடகங்கள் 'அவர்கள்" இல்லை இதன் பின்னணியில் என்றவுடன் நிசப்தமானது.. இவர்கள் மொழியில் "தேசவிரோதிகள்" இல்லையென்றவுடன் பிரதமர் உள்துறை அமைச்சர் தொடங்கி சுமந்த் மாமாக்கள் வரை அமைதி காக்கிறார்கள் 
வேறெதையோ எதிர்பார்த்து ஏமாந்து பாதுகாப்பு குறைபாடு என்ற சொற்சொடரோடு முடித்துக் கொணடார்கள் .. 
..
ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசியவுடன் திமுக ஆட்சியை கலைக்க சொன்னவர்கள் இப்போது மௌனம் விரதம் இருக்கிறார்கள்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீசியவனுக்கு அனுமதி சீட்டு தந்த பாஜக எம்பி அவையில் இருக்கிறார்.. விரிவான விரைந்த விசாரணை தேவையென குரல் கொடுத்த கனிமொழி Kanimozhi Karunanidhi   உள்ளிட்ட 15 பேர் இடை நீக்கம் வாழ்க சனநாயகம் 
..
சனநாயக விழுமியங்கள் கொஞ்சம் கொஞசமாய் செத்துக் கொண்டிருக்கிறது.. இங்கே பாரப்பனர்கள் தவிர மற்றவர்கள் நீதி,சட்டம், அரசியல் கொண்டு மெல்ல மெல்ல கொல்லப்படுகிறார்கள்..  இந்த நாடு தன் ஜீவனை இழக்கிறது.. சட்டம் முன் நின்றாலும், நிறமும் உடையும் அடையாளமும் உற்று நோக்கியே தீரப்புகள் எழுதப்படுகின்றன.. மிச்சமிருக்கும் நம்பிக்கை செயலிழக்கிறது.. வாக்குகள்,விலைபேசியோ மிரட்டியோ அல்லது இயந்திரம் கொண்டோ தனகாக்கிக் கொள்ளும் தந்திரமே இன்றைய தேசபக்திமார்களின் சூட்சமம்
..
எங்கே போகிறது எனது இந்தியா அடிப்படைவாதிகள் மதவெறிகள் முட்டாள்கள்,பொய்யர்கள் கையில் கிடந்து சீரழிகிறது.. இன்னமும் நாம்  இந்திய சனநாயகத்தின் ஆணிவேரில் இன்னமும் கொஞ்சம் ஈரமிருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது..
இன்றைய இந்திய ஒன்றியம் திராவிடத்தின் திமிலில் ஏறி பயணிக்க வேண்டும் .. மக்களின் தன்னெழுச்சியும் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் சாதிமத வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாய் ஒற்றை இலக்கோடு பாசிச மதவெறியாளரகளை வீழத்துவதே வரும் தலைமுறைக்கு 
செய்யும் நற்செயல் 
..
ஆலஞ்சியார்