Saturday, July 16, 2022


பேசு..
காற்று 
தென்னங்கீற்றின் 
காதோடு 
கதைப்பதைப்போல..
மலரின் 
இதழில் 
வண்டமர்ந்து 
ரீங்காரமிடுவதைப்போல
மரக்கிளையில் 
தொங்கும் 
மாம்பழத்தை
அணில் கொறிப்பதைப்போல
மெல்லிய ஓசையில் 
பேசு ..
..
காவிரிப் படுகையில் 
மயில் தோகைவிரித்தாட
மேகம் 
தராத மழைப்பொழுதில் 
(இருண்ட வானம்)
தென்னமரத்தில் 
அணில் குதித்தேறும் 
அழகிய தருணம் ..
சின்ன சின்ன குரலில் 
கிளிகளும் குருவிகளும் 
இசைபாட
மெய்மறந்து நான் நிற்கையில் 
பழங்கதைகள் 
நெஞ்சில் நிழலாட 
பூமி அதிராமல் 
நடைபோட்டு வந்து
காதருகில் 
ஏதோ சொன்னாய்..
..
பேசாத மொழியில் 
பேசி தீர்க்க 
எண்ணமெல்லாம் 
வழிந்தோடும்
எண்ணற்ற சொற்கள் 
சுவைகூடிய நளினம் 
அகந்தையற்ற அன்பு
காவிரி பெருவெள்ளத்தில் 
மிதந்துவரும்  
ஒற்றை இலையைப்போல
தனிந்திருந்தேன் 
உன் கரம் ஏந்தாதா என..
பூவரசம்பூ நிறத்தில் 
ஒற்றை ரோசா
உன் கூந்தலுக்கு அழகுதான் 
ஆனால் 
மல்லிகை சரம் 
உன் நெஞ்சில் 
தொங்குமழகுபோலில்லை..
சத்தமில்லா கொலுசு 
எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை 
வருமொசை அறிவிக்காமல் 
அதென்ன ..
..
கரம்கோர்த்து 
கரையோரம் 
நடந்ததெல்லாம் 
கனவாகிப்பேனாலும்
மழை நின்று 
இலை சிந்தும் துளியில்
மரத்தில் சாய்ந்து 
தந்த முத்தம்
நெஞ்சில் 
வரைபடமாய் ..
லோலாக்கின் 
நடனத்தில்
பித்தனைப் போல்
கவிதை பேசியதும்
கைநீட்டி காற்றையளந்து 
விரல்கொண்டு முகத்தில் வரைந்த ஓவியம் 
நதியோரமர்ந்து 
ஓடும் நீரில் 
காலடித்து 
சன்னகுரலில் 
பாடி மகிழ்ந்தது 
எப்போது 
குடமுருட்டி வந்தாலும் 
நிழலாடுகிறதே
..
வா..
வந்து பேசிவிட்டு போ
வேண்டாவெறுப்பாய் 
சிலவார்த்தையெனினும்
அது 
தென்றலைப்போல சுகம்தருமே
உன் குரலில் 
சிலவரிகள் 
அது இசையாகுமே..
புத்தகப்புழு என
கிண்டல் 
செய்ததைையெல்லாம் 
மறு பதிப்பு செய்துவிட்டு போ
காதல் 
எத்தனை இனிமை ..
..
ஆலஞ்சியார்

Thursday, July 14, 2022

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மாபெரும் மக்கள் சபையில் "ஊழல்" என்று பேசகூடாதாம் .. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் பறிக்கபடுகிற தேசத்தின் ஆட்சியாளர்கள் வீழ்ந்ததாகதான் வரலாறு சொல்கிறது ..
..
கருத்தை எதிர்க்கொள்ள துணிவின்றி எதிர்க்கட்சிகளுக்கு பயந்து ஒரு ஆட்சியாளர் இருப்பதை இப்போதுதான் உலகம் காண்கிறது .. எட்டுவருடமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத "56 இன்ச் " என தன்னை பெருமைபேசியவர் இன்று குரலுக்கு பயபடுகிறார் ..
தெனாலியில் கமல் சொல்வதை போல கண்டால் பயம் நின்றால் பயம் ... 
..
சர்வாதிகாரம் சர்வாதிகாரி இரட்டைவேடம், அவமானம், வெட்ககேடு, ஒட்டுகேட்பு, நாடகம், திறமையற்றவர், முட்டாள்தனம் .. இன்னும் நீண்டுகொண்டு போகிறது .. இவையெல்லாம் மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.. பொருளாதார வீழ்ச்சி கீழ்நோக்கி செல்வதும் ₹40 க்கு பெட்ரோல் விலையை கொண்டுவருவோம் என்றவர்கள் ஆனால் ₹80 தாண்டுகிறது ..ஊழலை ஒழிப்போம்  என்றவர்களை பணமதிப்பிழப்பிலும்,PMCAREலும் கண்டோம் ₹300 கோடி கண்டெய்னரில் வந்ததும் ஊழல் வழக்கில் தண்டிக்கபட்ட A1 ஜெயலலிதாவை அமைச்சர்களே சந்தித்து பேரம் பேசியதும் தீர்ப்பை தள்ளிபோட்டதும் இவர்கள் ஊழலுக்கெதிரானவர்கள் என்பதை நாடும் நாட்டு மக்களும் புரிந்துக்கொண்டோம் ..
..
நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் நின்று பதில் கூற வக்கற்றவர்களிடம்  வேறெதை எதிர்பார்க்க முடியும்.. நாடாளுமன்ற செயலகம் பட்டியிலிட்டிருக்க வார்த்தைகள் ஆபாசமோ ,அருவருப்போ, வன்மமோ, கொச்சைபடுத்துதலோ இல்லை ஆட்சியாளர்களின் இயலாமையை உணர்த்தும் வார்த்தைகள் .. நேர்மை பேசி திரியும் மதமேறிய மூடர்கள்  .. புராணம் புரட்டை கதைபேசி திரியும் அறிவிலிகள் நாட்டை நாசமாக்குகிற கும்பல் கருத்தை எதிரிக்கொள்ள தயங்குவதில் வியப்பில்லை ..
..
நீதிமன்றங்கள் "மநு நீதி" யாகி போன நாட்டில் குரல்வளையை இரும்புகரத்தால் திருகிட நினைக்கும் பாசிச சிந்தனையாளர்கள் , மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை விலைபேசும் கயமை, குறுக்குவழியில் அதிகாரத்தை அடைதல், ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளையும் காலில் போட்டு மிதிப்போம் .. அரசின் சாரநாத் சின்னம்  சிங்கத்தின் கோரபற்களோடு நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார்கள் .. எதிர்க்கட்சிகளை இல்லாதாக்குவோம், அப்படி எதிர்த்தால் ஆளுநரை கொண்டு அரசில் நலத்திட்டங்களை முடக்குவோம்.. அடங்கியொடுங்கி அடிமையாக நின்றால் மெல்ல தின்று பசியாறுவோம் .. என ஆட்சியாளர்கள் எண்ணுவது அவர்களின் இயலாமை..பயம் 
..
இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல  தமிழர்கள் .. எப்படி பேச வேண்டுமென தெரியும்.. நாடு கேட்கிறார் என்றபோது இந்தியா நாடே அல்ல பலமொழி பேசும் பல்வேறு இனமக்கள் வாழும் துணைக் கண்டமென பதிலடி தந்தவர் பேரறிஞர் அண்ணா .. 
இந்திய தேசிய மொழியாக இருக்க ஹிந்திக்கு தகுதியில்லை அதற்கு தகுதியான மொழி தமிழ்தான் என நாடாளுமன்றத்தையே அலறவிட்டவர் காயிதெமில்லத் ..
இவர்கள் வரிசையில் இரா.செழியன், நாஞ்சிலார், மாறன், வைகோ.. என நீண்ட வரிசை படைத்தளபதிகள் வாய்வீச்சில் செயலிழந்து நின்ற ஆட்சியாளர்களை அறிவோம் .. இப்போதும் பாலு ராசா மாறன் கனிமொழி தமிழச்சி.. என பெரும்படை உண்டு .. எப்படி பேசுவதென தெரியும் .. அவசரநிலை காலத்தில் எப்படி எழுதுவது பேசுவதென பாடம் நடத்தியிருக்கிறார் எங்கள் தலைவர் கலைஞர் .. வழக்கு, நீக்கம், சிறை, இவைக்கஞ்சா நெஞ்சுரம் கொண்டவர்கள் திராவிடத்தலைவர்கள் .. 
தொடைநடுங்கிகளே களத்தில் சந்திப்போம் .. 
நாடாளுமன்றத்தில் சொற்போரால் ஆட்சியாளர்களின் அவலத்தை தோலுரிப்போம்.. இந்தியா கண்ட மோசமான பிரதமரையும் ஆட்சியையும் நாடறிய செய்வோம் ..
வாருங்கள் 
சந்திப்போம் கோழைகளே..
..
ஆலஞ்சியார்

Monday, July 11, 2022

அதிமுக..
அநாகரீகம் அசிங்கம் அபத்தம் 
அறிவிலிகூட்டம் ..
நாகரீக அரசியல் அவர்களுக்கு தெரியாது வராது .. சட்டமன்றத்திலேயே சேலையை கிழித்துக்கொண்டு நாடகமாடிய நடிகையின் வார்ப்புகள் இன்று தெருவில் அடித்துக்கொள்கின்றன 
..
யார் கரம் உயர்ந்தது என்பதற்காக கோடிகளில் விலைப்பேசல் .. ஏற்றிவிட்டவரை கொடுவாளைக் கொண்டு வெட்டிவீழ்த்தும் நயவஞ்சகமும், கூட இருந்தே குழிபறிக்கும் சூதும், அதிமுகவின் அடிப்படை சித்தாந்தம்.. அவர்களுக்கென்று கொள்கை கிடையாது..  திமுக எதிர்ப்பு அதைதவிர வேறெதும் இல்லாத அரசியல் நகர்வு.. மக்கள் நலன் எல்லாம் அவர்கள் அறியாதது ..  ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை .. இதயதெய்வமாவது மண்ணாகட்டியாவது பணம் கொடுத்தால் பன்றியோடு சேர்ந்து  உழலுவோம் ..
..
மகோரா எனும் துரோகத்தின் நிழல் இன்றும் தொடர்கிறது .. ஜெயலலிதா எனும் பாசிசத்தில் காலடியில் கிடந்த கயமைகள் இன்று தங்களுக்குள் கழுத்தறுத்துக் கொள்கிறார்கள் ..
நிறைய துரோகிகள் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது .. 
சினிமா மோகம், நடிப்பு ,பாசிசத்தின் கரிசனம், ஊடகங்களின் மெல்லிய புன்னகை, திராவிட எதிர்பார்ப்பாளர்களின் நம்பிக்கை இவைதான் இதுவரை காத்தது .. இத்தனை ஆண்டு நிலைத்து நின்றதே பொய்யை பூதாகாரமாக்கி குளிர்காய்ந்ததும் அதை பாசிச பார்ப்பன சிந்தனையாளர்கள் தூக்கிபிடித்ததும் தான் காரணம் ..
ஜெயலலிதா வழக்கு உயிரோடு இருக்கும் போதே தீர்ப்பு கிடைத்திருக்குமேயானால் நிலைமையே வேறு .. இப்போதும் மக்கள் பாசிசத்தின் வேர் ஊடுறுவ கூடாதென்பதற்காக நேரடியாக சனியனை சுமக்க வேண்டாமென்பதற்காக மென்மையான போக்கை கொண்ட
அதிமுகவை கடிவாளமிடலாம் என்ற நம்பிக்கையோடு அதிமுக வேண்டுமென்கிறார்கள் ..
..
ஒபிஎஸ் இபிஎஸ் இருவருமே நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் யார் அதிகம் நம்பிக்கை துரோகம் செய்கிறார் என்பதில் அவர்களின் வெற்றி தெரிகிறது ..சூழ்ச்சி, பணம்,  ஊழல், இவையோடு அதிமுகவை விழுங்க பார்க்கும் திமிங்கலத்தின் பாசம் இன்றைய நிலைக்கு காரணம் ..
எம்ஜிஆரை மட்டுமே தெரிந்த சினிமா ரசிகனுக்கு, கருணாநிதி/திமுக எதிர்ப்பை சொல்லி சொல்லி  வளர்ந்த பாமரனுக்கு, சாதி அரசியலை முன்னெடுத்தவனுக்கு, காலை கண்டால் விழுந்து கும்பிடும் அடிமைகளுக்கு இவையெல்லாம் பெரிய விடயமில்லை .. நாலுகாசு பார்க்க முடியுமா கொள்ளையடித்த கோடிகளில் பங்கு கிடைத்தால் போதும் .. ஊழல் கொலை வழக்குகளிலிருந்து தப்ப வேறு மார்க்கமில்லை ஆதனால் கூட நிற்கிறார் ..
..
இந்த ஆட்டத்தின் கயிறு கூத்துகாரனின் கையில் .. தலையாட்ட மட்டுமே இவர்களுக்கு அதிகாரம் .. கூத்தாடி கண்ட கட்சியின் கூத்துகள் காலங்கடந்த ரசனைகள் .. மக்கள் மௌனமாய் ரசிக்கிறார்கள் .. அவர்களே யாரை ஏற்கவேண்டுமென தீர்ப்பு சொல்லும் எஜமானர்கள் .. அதிமுக அழிவை எதிர் சிந்தனையாளர்கள் கூட விரும்பவில்லை ..  கோமாளிகளின் நாடகம் முடிவுக்கு வரும் ..
..
கூத்து ரசிக்கும்படி இல்லை..
..
ஆலஞ்சியார்

Saturday, July 9, 2022

அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு அறிவுரை கூறலாம் .. பொய்யும் புரட்டும் மலிவான விளம்பரம் தேடுவோர் பற்றி 
I Dont Care ..
..
 மதங்களை வைத்து அரசியல் செய்வது ஏதோ இவர்கள் தான் தேசபக்தர்கள் மற்றவர்கள் விரோதிகளைப்போல பேசுவதும் ஜெய் ஹிந்த் சொல் இல்லையென்றால் நாட்டுபற்றில்லாதவன் என புலம்புவதும் இங்கே எடுபடாது .. யார் சொல்கிறார் பாருங்கள் நேற்றுவரை ரௌடியாக மக்கள் மிரட்டி பணம் வசூல் செய்யும் கந்துவட்டிக்காரன் தேடபடும் குற்றவாளி என நாட்டின் நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நமக்கு பாடமெடுக்கிறார்கள் .. காளி வாயில் சிகரெட்டா என கொந்தளிக்கிறார்கள் மதுவும் புகையும் தான் காளிக்கு படைப்பதில் விருப்பமானது .. முஸ்லிம் என்றால் கார் ஏற்றி கொல் யாரும் கேட்க மாட்டார்கள் .. குஜராத் கலவரம் அதுகுறித்து செய்தி வெளியிட்டால் சிறை பாதிக்கபட்ட மக்களுக்காக வாதிட்டவருக்கு சிறை .. தன்னை 108 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் சாமியாரென பெண் வழக்கு தொடுக்கிறார் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து 10 நீதிபதிகள்.. பின்மாறுகிறார்கள் சாமி பிராமணராம் .. என்ன கூத்து என யாரும் கேட்கவில்லை..
..
தலித் எம்பி ஆகலாம் ஆனால் நாட்டின் முதல் குடிமகன் கோவிலுக்குள் நுழைய முடியாது .. என்ன நாடு இது யாவரும் சமமென சொல்லும் சட்டத்தில் இதற்கெல்லாம் இடமில்லை .. ஆனால் பரமேஸ்வரன் என்ற பட்டியலினத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்கியது தமிழ்நாடு..
..
நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து போனாலும மக்கள் மீது வரிவிதிப்பை சுமத்தி சுரண்டுவோம் உயிர்க்கு ஆபத்தான நிலையில் ICU  ல் இருந்தாலும் வரி உண்டு
  பிணமாகி விழுந்தாலும் விடுவதில்லை GST போடுவோம் என்ன கொடுமை ₹430 க்கு போராடியவர்கள் திடுக்கிடவைக்கிறது என்றவர்கள் கேஸ்விலை ₹ ஆயிரம் கடந்த பின்னும் மக்கள் கிளர்ச்சி இல்லை அதை சப்பைகட்டி விவாதம் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் ..
..
அண்டை நாட்டில் ஆண்டவன் அலறியடித்து ஓடுவதை ரசிக்கிற மனம், நம் நாட்டின் ஏதோச்சிய அதிகாரத்தை கேள்வி கேட்பதில்லை .. விலைப்பேசலாம், 
துரோகிகளை வாங்கி ஆட்சியை கலைக்கலாம், அடிமைகளை உருவாக்கி சீர்குலைக்கலாம் கட்சியை களேபரம் செய்யலாம் .. வாக்கு இயந்திரமும் பார்பனீய நீதியும் இருக்கும் வரை ஆடலாம்.. 
நீதிகேட்பவர்க்கு எதிராக அட்டர்னிஜெனரலே வாதிடலாம் இவையும் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தி நேரிடும் ..
..
திராவிடன் ஆளும் தமிழ்நாட்டில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும்.. நிலத்தடி நீரை எடுக்க ₹10,000 கட்டு என ஒன்றியம் சொன்னால் அது தமிழ்நாட்டிற்கு பொருந்ததாது..
பொறியியல் கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு - 
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது - ஸ்டாலின் அரசு
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் 
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது - ஸ்டாலின் அரசு
அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பாடப்பிரிவுகள் செயல்பட அனுமதி இல்லை 
ஒன்றிய அரசின் அனுமதி நமக்கு தேவையில்லை
ஜிஎஸ்டி கூட்டம் வட மாநிலங்களில் நடத்தப்படும் தமிழ் நாட்டில் நடத்த வேண்டும் ..
..
வீணர்கள் விவரங்கெட்டவர்கள் மூளை கூட சுமையென திரிவோர் நாட்டின் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தரங்கெட்டவர்களை கண்டு நமக்கு கவலை இல்லை
I Dont Care .. எனச் சொல்வோம் 
..
நமக்கு நல்ல தலைவன் வலுவான அஞ்சாத நேர்மையோடு வழிநடத்தும் திராவிடத் தலைவன்  இருக்கிறார் .. 
The LEADER OF DRAVIDIAN SOIL 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin is More Dangerous 🔥
..
ஆலஞ்சியார்

Wednesday, July 6, 2022

இசை 
மௌனமாகிறது..
போர்களத்தில் 
புல்லாங்குழல் 
என்ன செய்யும்
பைத்தியங்களின் 
கையில் 
புல்லாங்குழல் எதற்கு
அரசியல்
கோமாளிகளின் 
அபத்தத்திற்கு
இசையமைக்க 
இசை அரசன் எதற்கு..
..
பாடகனின் 
குரல் 
நசுக்கபடுகிறது 
சனாதனம் பேசி
தன்னையே 
தாழ்த்திக்கொள்ளும் 
கானக்குயிலுக்கு
தகரத்தில் மகுடம் 
..
இசைஞானி எனும்
வைர மகுடத்தைவிட 
பூக்களால் ஆன தலைப்பாகை
பெருமை தராது 
இசையால் 
உலகாண்டவனுக்கு
மக்களிசையாய்
கட்டிபோட்டவனுக்கு
கடிவாளம் ..
..
நியமனங்களில்
ஜால்ரா சத்தம் 
கேட்பது வாடிக்கை
ஜால்ராவிக்கே
நியமனம் தந்தது வேடிக்கை
இவரின்
இசைக்கு தராமல்
இசைவுக்கு தந்ததால் 
அதில் புகழில்லை
ஆனால் 
இவன்
இசையில் 
எப்போதும் 
பழுதில்லை
..
சனாதன இசைக்கு
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

Monday, July 4, 2022

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பாஜக சகாப்தம் தான், இனி தென்னிந்தியாவில் பாஜக வளரும், தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
.. 
தென்னகத்தில் பாஜக வளர பெரும் முயற்சியில் இருப்பதும் அதற்காக நிறைய செலவு செய்து பட்டியிலின மக்களை தேர்வு செய்து பிரதான பதவி ஆசையைகாட்டி புதைக்குழியில் தள்ளுகிறது .. 
ரௌடிகள், கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தபட்ட சமூகவிரோதிகள், மோசடிபேர்வழிகள் என நாட்டின்  தேடபடும்
"முக்கியமானவர்கள்" சேர்த்து பலம்காண்கிறது .. பிற்படுத்தபட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி சாதிவெறியை தலைக்கேற்றி ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது ..
..
கேரளம் தமிழகம் தெலுங்கு தேசம்  இம்மூன்றிலும் எப்பாடுபட்டாயினும் எந்த வழியிலேயினும் அதிகாரத்தை அடையவேண்டும் அல்லது அதிகாரம் செய்பவர்கள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கவேண்டுமென நாக்பூர்  நினைக்கிறது .. சித்பவ பிராமணர்களின் கட்டுபாட்டில் இந்திய ஒன்றியம் இருக்கவேண்டும் அதற்காக எந்த நிலைவரையிலும் செல்ல தயார் 
புராணம்  புரட்டுகதைகள் நம்பிக்கை என்ற பெயரில் மக்கள் மனநிலையில் மந்தத்தை தொடர்ந்து வைத்திருந்தால் போதும், சோறு உடைமை இரண்டிற்காக அவனை எதிர்பார்ப்போடு வைத்திருக்கவேண்டும்.. கல்வியறிவு தவறியேனும் அவன் பெற்றுவிட கூடாது விழிப்புணர்வு பெற்றால் ஏன் எதற்கென கேள்வி கேட்பான் என தெளிவாக இருக்கிறார்கள் .. தமிழ்நாடு கேரளா போன்று விழிப்புணர்வும் சுயமரியாதையும் கொண்ட மாநிலங்களில் பணத்தாசை பதவி ஆசை வழக்கு கைது என மிரட்டி சிலரை கைப்பாவையாக்கி செயல்படுகிறார்கள் .. அடித்தளம் பலமாக இல்லாத எதுவும் வீழ்ந்துவிடும்..
..
தமிழ்நாட்டில் அதிமுகவினரின் நிலை கவலைதருவதாக இருப்பது காங்கிரஸ் மெல்ல கரைய தொடங்கியிருப்பதும் நாக்பூருக்கு மகிழ்வு தரும் விடயம் ..  "நமக்கு அமைந்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்" என்பதைப்போல மூன்று பிரிவாக (தினகரன், பன்னீர்,பழநி) பிரிந்திருந்தாலும் மூவருமே பாஜகவிற்கு ஆதரவு தரும் நிலைபாடு யார் சிறந்த அடிமை என்ற போட்டிபோடும் நிலை கேவலமாக இருக்கிறது ..
..
மராட்டியத்தில் சித்பவ பிராமணரான தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக விடாமல் ஏக்நாத் சிண்டே முதல்ராக்கியதற்கு புனே பிராமணர் சங்கம் பாஜக ஆதரவை திரும்ப பெற்றிருக்கிறது எங்கே நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்ற மோடியின் அச்சம் தெளிவாக தெரிகிறது இதிலிருந்து நமக்கு சில உண்மைகள் தெரியும் .. பிராமணர்களுக்கு பதவியை விட அதிகாரம் செலுத்தும் ஆட்டிபடைக்கும் இடத்தில் இருக்கவேண்டும் ..என்ன நினைக்கிறோமோ அது நடக்கவேண்டும் ..இது பிற்படுத்தபட்ட தாழ்த்தப்பட்ட,ஒடுக்கபட்ட சமூகத்திற்கு புரியாது.. பணம் பதவி அது சுயமரியாதை இழந்து நின்றாலும் பரவாயில்லை கிடைக்கவேண்டும் .. நாடும் நாட்டு மக்களும் எக்கேடுகெட்டால் என்ன..? நமது உரிமைகள் பறிபோனால் என்ன..? காரியம் நடக்கவேண்டுமெனில் காலிலும் விழுவோம் வளைந்து கும்பிடுபோடுவோம் மகா கேவலம் ..
..
எச்சரிக்கை
தமிழ்நாட்டை
ஸ்மார்ட் மாநிலமாக மாற்ற நினைக்கும் திராவிடமாடல்
தமிழ்நாட்டை வடநாட்டைப்போல ஏழ்மை வறுமை அறிவின்மை என
நாசமாக்க நினைக்கும் நாக்பூர் மாடல் ..
..
எதுவேண்டும்  யார் வேண்டும் நமக்கு 
நாக்பூரின் அடிமைகளா..
அல்லது 
சுயமரியாதை பெண்ணுரிமை கல்வி வேலைவாய்ப்பு அதிகாரத்தில் சமநீதி சமத்துவநீதி எதிலும் வெளிப்படைத்தன்மை,
நேர்மை , நெஞ்சுறுதி என அஞ்சாது பணியாற்றி மக்கள் தலைவனா..
நாம் தளபதியை பின் துணைப்போம் திராவிட மாடல் தலைவன் 
M. K. Stalin அவர்களை
கொண்டாடுவோம் ..
திராவிடமே தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்து தேவை 
..
ஆலஞ்சியார்

Sunday, July 3, 2022

பச்சைகிளிகள் இரண்டு 
பறந்துவந்து ..
குசலம் விசாரித்தது 
மைனா குருவி 
வீட்டு கொள்ளைப்புறம் 
பாடி வரவேற்றது ..
சின்னஞ்சிறு குருவிகள் 
பலகுரலில் கூவி கும்மாளமிட்டது ..
மண் வாசனை 
மூக்கை துளைத்து 
மூளையில் ஏதோ செய்தது 
அணிகள் மின்சார மீட்டர் பெட்டியில் தனக்கான 
கூட்டை கட்ட 
குப்பையை சேகரித்திருந்தது  
நான் நட்ட மரங்கள் 
நீண்டநாள் காத்திருந்த 
ஏக்கத்தோடு 
காற்றில் தலையசைத்தது ..
இரையிட்ட ஒரேநாளில்
கோழிகுஞ்சுகள் 
காலை சுற்றிநின்று 
ஏதோ சொல்லவருகிறது .. 
மாடி தோட்டம் 
கேட்பாற்று கிடந்தது..
..
குடமுருட்டி ஆறு 
பழைய கதை பேசியது ..
சன்னமாய் காதோடு 
காதல் மொழியில் நினைவுகளை கிளறியது 
இளங்கார்குடி செல்லும் வழியில் மயில்தோகை விரித்து ஆட்டம் போட்டது ..  கொள்ளபுறத்தமர்ந்து 
வயல்காற்றை வாங்கியபோது 
தவக்கள காலில் வந்தமர்ந்து 
கூத்தாட்டம் போட்டது ..
இத்தனை இன்பங்கள் 
எம் மண்ணில் ..
..
கலைஞர் நாட்டில் 
கால் வைத்தது முதல் 
நெஞ்சில் பேரின்பயோசை
காதலும் கனிவும் 
உரிமையும் கோபமும் 
கலந்த உறவின் பாசமழை 
வேறன்ன வேண்டும் 
நீண்ட வரிசையில் 
பேரன்பு அழைப்புகள் 
அலைபேசியில் 
காத்திருந்தது 
 ஒவ்வொன்றாய் 
அழைத்து அகமகிழ்ந்தது 
யாம் பெற்ற பேறு ..
..
யாவும் நலம் ..
..
ஆலஞ்சியார்