Friday, April 21, 2023

கை நீட்டி பேசாதீங்க ..
நேரடியான சாதிய வன்மம் தவிர வேறென்ன இருக்கமுடியும் ..
போடா நாயே என்றழைக்கும் சில்லறைபயலை கேள்வி கேட்க முடியாதவர்கள் .. உன்னை யார் அழைத்ததென கேள்வி கேட்டபவரிடம் எதிர்கேள்வி எழுப்ப முடியாதவர்கள் வா போ என அழைக்கும் மரம் வெட்டும் தமிழ்க்குடியோடு எதிர்வினையாற்ற முடியாதவர்கள் 
திருமாவிடம் மட்டும் கேட்பதேன்..?
.. 
திருமாவோடு நிறைய கருத்து முரண் இருந்தாலும் அவர் சனாதனத்தின் எதிர்ப்பில் கடுமையாக இருப்பதை மறுக்கமுடியாது..பிற பட்டியலின தலைவர்கள் வாலாட்டும் போது இவர் மட்டும் 
வளைந்து கொடுக்காமல் இருப்பது வலதுசாரிகளுக்கும், நடுநிலை என்ற பிம்பத்தில் பிழைப்பு நடத்துவோருக்கும்  பாசிச சக்திகளுக்கு தூக்கத்தை கெடுப்பதாக உள்ளது 
..
பட்டியலின தலைவர்கள் வெகு இலகுவாக விலைபேச முடியும் என்ற நம்பிக்கையை பொய்யாக்கியவர் .. ராம்விலாஸ் பஸ்வான்  கிருஷ்ணசாமி என பலரை அதிகாரம், பணம் மிரட்டல் என பல்வேறு வழிகளில் கைக்குள் ஆக்கியவர்கள் திருமாவிடம் தோற்று நிற்கிறார்கள்.. 
எட்டி நின்றவர்கள் படித்தார்கள் பட்டம் பெற்றார்கள் முனைவராய் நிற்கிறார்கள் என்பது இவர்களின் சனாதன மூளையை களங்கடிக்கிறது ..  போடா நாயே, ஆண்டி இன்டியன் என்ற போதெல்லாம் வராத கோபம் கைநீட்டி பேசுவதால் வரும் என்றால் 
கைநீட்டிதான் பேசுவோம் ..
கை நீட்டி பேசாதே என்பது அழுகிய பீடை குரல் ..  மூளையை மழுங்கடிக்கும் சாதியின் குரல் 
பாசிச அடிமையின் குரல் .. 
..
ஆலஞ்சியார்

Wednesday, April 19, 2023

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி தமழ்நாடு அரசு  இந்திய சாதிய அமைப்பு கொடூரத்தை மிக எளிமையாக விளக்கியிருக்கிறது ..
எந்த மதத்திற்கு மாறினாலும் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்ற தீர்மானம் இனி விவாதபொருளாகி நிறைய பேசபடும்..
..
இதை முன்மொழிந்த தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சபையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்திருப்பதிலிருந்தே சரியானபாதையில் செல்கிறோம் தீர்மானம் சரியானதென தெரிகிறதென சொல்லி இந்த சாதீய அமைப்பை எதற்காக கட்டிக்கொண்டு அழுகிறது பாஜக என்பதை விளக்கியிருக்கிறார் .. 
எங்களின் அடிமையாகவே இருந்தால் மட்டுமே,சலுகையை பெறலாம் என்பதையே இதுகாட்டுகிறது .. இந்த மக்கள் "மதம் " மாறினாலும் பெரியளவில் மாற்றங்களை பெற முடிவதில்லை அவர்கள் அங்கேயும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை
..
பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்துமதத்திலிருந்து மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடரவேண்டுமென அறிய ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கபட்டது ஏழு மாதங்கள் ஆன நிலையில் தமிழ்நாடு அரசின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது (கமிஷனின் ஆயுட்காலம் இரண்டாடுகள்).. 
இங்கே மற்றொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும் இந்திய இடஒதுக்கீடுகளில் ST, OBC  பிரிவுகளில் மதம் தடையாக இல்லை ஆனால் SC யில் மட்டும் இந்து, பௌத்தம், ஜெயின் தவிர பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு இடமில்லை .. ST,OBC ல் இந்த பாகுபாடு இல்லை.. ஆனால் SC க்கு மட்டுமே உண்டு .. 
..
மதம் மாறியதால் அவர்கள் நிலை மாறிவிடும் என்பது யதார்த்ததில் இல்லை .. தலித் கிருஸ்துவர்களென்றே கருதபடுகிறார்கள் .. இங்கே கேள்வியே பௌத்தம் ஜெயின் மதத்திற்கு மாறினால் இடஒதுக்கீட்டை தொடரலாம் என்பதும் கிருஸ்துவம் முஸ்லீமாக மாறினால் தேவையில்லை என்பது தான் ..  இந்துவாக இருந்து அடக்குமுறைக்காளானவர் பௌத்தம்  மாறினால் அவர் தொடர்ந்து பட்டியலில் தொடரலாம் என்பதும் விவாதிக்கபட வேண்டியவை .. சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் வலியுறுத்தியிருக்கிறார் .. எத்தனை விழுக்காடு இருக்கின்றீர்களோ அவ்வளவு பெற்றுக்கொள்ளுங்கள் (விகிதாச்சாரிய) இடஒதுக்கீடென்பதே 100% விழுக்காட்டை கொண்டதாக இருக்கவேண்டும் .. பார்பனர்களுக்கும் அவர்களுக்குரிய 3% தரலாம்.
..
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு 10% இதர சிறுபான்மையினருக்கு 5% என்பதும் இங்கே கவனிக்கபடவேண்டியவை .. 64.5% விழுக்காடு வழங்கபடவேண்டும் என பரிந்துரைத்திருக்கிறார் .. நாம் இதை ஏற்கனவே 69% ஆக தமிழ்நாட்டில் தருகிறோம்.   எதுஎப்படியோ சரியான நேரத்தில் சமூகநீதியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிடமாடல் தலைவனின் கருத்து இந்திய ஒன்றிய அரசின் ஏகாந்தத்தை சிதைக்கும் என்பதில் கருத்துவேறில்லை ..
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 🔥
..
ஆலஞ்சியார்

Friday, April 14, 2023

உழைத்து வாழ வேண்டும்..
..
திடீர் அரசியல்வாதிகள் , நவீன தேசபிமானிகள், தம்மை தவிர மற்றவர்களை தேசவிரோதிகளாக நினைப்பவர்கள், தமிழ்தேசியம் பேசும் சிறுவர்கள், அரசியலறியாத
அறிவு குருடர்கள் உணர்வை தூண்டி பசியாறும் கேவலமானவர்கள்,  இவர்களெல்லாம் உழைத்து வாழ விரும்புவதில்லை.. சீமான் தொடங்கி அண்ணாமலை போன்ற அரைகுறைகள் வீட்டுவாடகை கைசெலவு கூட நண்பர்களிடம் கையேந்தும் இவர்கள் .. 
உண்மையில் எதையாவது எதிர்பார்த்துதான் எவனும் செலவு செய்வான் எனும் உண்மை அறியாமலா இருப்பார்கள் 
..
இவர்கள் உண்மையில் 
யாரோ ஒருவரின் இயக்கத்தில் இயங்கும் இயந்திரங்கள்.. அவ்வளவுதான் .. பொய் புளுகு புரட்டு இவைதான் மூலதனம் 
.. முன் சொன்னதை மாற்றி பேசுவதும், இதனால் அவமானம் வந்தாலும் துடைத்துபோட்டுவிட்டு காசுக்காக கண்டதையும் திண்ணும் களிசடைகள் ..
..
ஊருக்கு உபதேசம் செய்யும் நவீன அரிசந்திரர்கள் .. வாய் திறந்தால் பொய்தான் .. அது கூட சோறுபோடுகிறது .. சோறு மட்டும் தானா ..? 
தமிழ்நாட்டின் அரசியலில் தரந்தாழ்ந்துபோனதே ..
அறிவுசார் பெருமக்கள், கருத்துமாறுபடினும்,கடுஞ்சொல் பேச நேரிடினும் , அறந்தவறாத நெறியோடும் குறைந்தபட்சமாயினும் நேர்மையோடும் அரசியல் செய்தார்கள் .. பெரும் தேசபக்தர்கள், இனமொழி காவலர்களும் ஒடுக்கபட்டவனை உயரத்தில் ஏற்றிட ஓயாதுழைத்தவர்களும் கண்ட தமிழ்நாடு .. இடையிடையே சாயபூச்சுகளில் களையிழந்தாலும் அரசியல் பண்பாட்டை தவறவிட்டதில்லை .. அரசியல் சூழ்ச்சிகள் கண்ணியம் தவறியதில்லை ..இடையிடையே பொய் தலையெடுத்தாலும் அது அவிழ்ந்துவிழும் சடைமுடியாய் தள்ளிவிட்டது தமிழ்நாடு .. ஆனால் இப்போது பொய்யர்களும் எது அரசியல் என அறியாத மூடர்களும் நம்ப முடியாத கதை சொல்லும் கிறுக்கர்களும் .. இறந்தவனின் உடலை தின்று வீங்கி தெறித்து நிற்கும் கயமைகளும், நாட்டிற்கு கேடு ..
..
தமிழ்நாடு கேடுகெட்டவர்களால் சூழபட்டிருக்கிறது .. இந்த சிறியவலையிலிருந்து மீளவேண்டும் .. அறிவுகொண்டு இவர்களின் கயவாளித்தனத்தை தோலுரிப்போம் 
..
ஆலஞ்சியார்

Monday, April 10, 2023

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றம் நிறைவேற்றியிருக்கிறது .. ஆளுநர் விவாததித்திற்கு அப்பாற்பட்டவரல்ல என்ற தீர்மானம் 144 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறது பாஜகவின் 2 வாக்குகள் எதிராக பதிவாகியிருக்கிறது. வழக்கம் போல் அதிமுக வெளிநடப்பு செய்து "விஸ்வாசமாய்" நடந்து "காட்டியும்"கொடுப்போம் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்..
..
ஆளுநர் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்திற்காளாவதும், சனாதனத்தை தூக்கிக்கொண்டு அரசியல் சட்டமாண்பை சீர்குலைப்பதும், தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசிற்கெதிராக செயல்படுவதுமாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.. பதிவிக்கேற்ற தகுதியும் கண்ணியமுமற்ற இவரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் 
..
நாள்தோறும் ஒரு கூட்டம் நாள்தோறும் ஒரு விமர்சனம் என ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார் .. வகுப்புவாத எண்ணம் கொண்டோரின் ஊதுகுழலாக செயல்படுவதாக மாண்பமை முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து பேசியது வரலாற்றில் இடம் பெறும் ..  விடுதலை போராட்ட வீரர்கள் படகாட்சியில் காந்தி நேருவை புறக்கணிக்கிறார் .. காந்தி நேரு இல்லாத சுதந்திர போராட்டமா.. யார் அப்பன் வீட்டு பணம் பேசாமல் ரவி பாஜகவில் சேர்ந்துவிடலாமென அவை முன்னவர் துரைமுருகன் பேசியிருக்கிறார் .. பாஜக தவிர்த்து அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து எதிர்ப்பை சொல்லி தீர்மானத்தில் பேசியிருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது ..
..
ராஜ்பவனில் குடியிருக்கும் உரிமை ஒருவருக்கு உண்டென்றால் அது மாண்பமை முதலமைச்சருக்குதான்
இருக்கிறதென சிந்தனை செல்வனின் கூற்றை புறந்தள்ள முடியாது அதே போல் ஆளுநரின் நிதியை சரிபார்க்கவேண்டும் .. உதவி திட்டங்கள் நலத்திட்டங்களுக்கு செல்லும் நிதி எங்கே செல்கிறதென "கணக்கு" கேட்பதும் அவசியம் .. எதையும் இனி "அளந்தே" படியளக்கவேண்டும்
..
கவர்னரின் செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது .. ஸ்டெர்லைட்  ஆலை விவாகரத்தில் அவர் மீது மானநஷ்ட் ஈடு வழக்கு தொடர ஆவண செய்யவேண்டும் .. சென்னாரெட்டிக்கு நடந்ததைப்போல செய்ய எங்களின் அரசியல் அறம் இடம்தரவில்லை ..  "அட்சய பாத்திரா" எனச் சொல்லி பெருந்தொகை வேறு வழியில் சென்றிருப்பதாத நிதியமைச்சர்  .பி.டி.ஆர்  சொல்வதிலிருந்து ஆளுநர் ரவியின் முகம் தோலுரிக்கபட்டிருக்கிறது ..  இந்த சட்டமன்ற அமர்வு பெரும் விவாதத்திற்கு பொருளாகியிருக்கிறது 
..
தேவையில்லா பதவியில் இருந்துக்கொண்டு தேவையில்லாததை பேசினால் தேவையில்லாமல் வாங்கிகட்டிக்கொள்ள வேண்டி வரும் ..
..
வரும்காலங்களில் ஆளுநர் இல்லாமலேயே சபையை நடத்த ஆயத்தமாக வேண்டியதும் .. கடும் அழுத்தம் தந்து ஆளுநர் பதவியை "இல்லாதாக்குவதும்"  அவசிய அவசர தேவையாகிறது ..
ஆட்டுக்கெதற்கு தாடி 
..
ஆலஞ்சியார்

Friday, April 7, 2023

சில மனிதர்கள் ..
நம் வாழ்வில் சில கற்றல்களில் ஆசானாய் வந்து நம்மை செப்பனிட்டு சென்றுவிடுவார்கள் .. சிலர் நம்மை புதிய பாதையில் நம்மை அறியாமலேயே செலுத்திவிடுவார்கள் .. யாரென்று முகமறியாத சிலர் நம்மில் தாக்கத்தை உண்டாக்கி சுவடே தெரியாமல் மறைந்துபோவார்கள் 
அப்படி சிலர் ..
வாயக்கா வாயக்கா என்று தெருவில் மழலைச்சொல்லில் வாழைக்காய் விற்றுக்கொண்டு வருவார் ..வேட்டி மேல் துண்டு அணிந்திருப்பார்
அவர் பெயரெல்லாம் தெரியாது தெருவிற்கு வந்தால் அவரை பகடி செய்வதில் தான் அதிக ஆர்வம் வரும் ..கேலி கிண்டல் செய்தாலும் முகம் சுளிக்க மாட்டார் தன் வியாபாரம் முடிந்தால் திண்ணையில், அமர்ந்து நாம் பேசுவதை கவனித்து கொண்டே இருப்பார் எதுவும் பேசமாட்டார் .. சிறுவர்களுக்கு அவரை சீண்டுவதுதான் வேலை நான் கூட கிண்டல் அடித்து மகிழ்ந்திருக்கிறேன் .. ஆனாலும் அவருக்குள் ஒளிந்திருக்கும் திறமை நமக்கு தெரியாமலேயே இருந்தது ..
..
ஒருநாள் தெருவில் சிலம்பம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது தன் வியாபாரத்தை முடித்து விட்டு வந்து அமர்ந்தவர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் .. நான் ஆடிக்கொண்டிருந்தேன் .. யார் கிட்ட கத்துகிட்டே என்றார் குறவஞ்சியை கத்துக்க தேனி கம்பம் அருகில் ஒருவரிடம் கத்துக்கிட்டேன் பெரிய ஆசான் மலைச்சாமி என்றேன் .. ஒழுங்கா கத்துகொடுக்கலையா என்றார் .. இங்கிருந்து (தஞ்சை) அங்கபோய்தான் கத்துக்கணுமா என்றார் 
சட்டென்று கோபம் வந்தது உஸ்தாத் ஹபீபுல்லாசா 
சொல்லி தான் அங்கு சென்று சிலம்பம் கத்துகிட்டேன் மிகபெரிய ஆசான் என்றதும் .. முறையாக கத்துக்கல .. அல்லது கத்துக்கொடுக்கல என்றார்  .. அவரின் மெலிந்த உருவத்தையும் அவரது அழுக்கேறிய உடையும் தோற்றமும் என்னை கேலி செய்ய வைத்தது.. யோவ் போயா தஞ்சாவூரில் பஞ்சா வேடிக்கையில ஆடி பரிசெல்லாம் வாங்கிருக்கேன் என்று கர்வத்தோடு எகத்தாளமாய் சொன்னேன் ‍.. அப்ப பரிசு கொடுத்தவனுக்கும் சிலம்பம் தெரியாது போலியிருக்கு என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்து போய்விட்டார் ..
..
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை நாம சரியா கத்துக்கலையோ என்று மனம் அலைமோதியது மறுநாள் வருவார் அவரிடம் மீண்டும் விளையாடி காட்டணும் என்ற நினைப்பு .. இரண்டு மூன்று தினங்கள் ஆளை காணோம்  நானும் கோபம் தணிந்து மறந்தே போய்விட்டேன் சில நாட்கள் கழித்து வீட்டில் அமர்ந்திருந்த போது வாயக்கா வாயக்கா என்ற சப்தம் .. என்னை ஏதோ செய்தது தெருவிற்கு வந்து பார்த்தேன் .. தூரத்தில் சென்றுக்கொண்டே இருந்தார் .. நான் வாழைக்கா என்றழைத்ததும் சாயங்காலம் வரேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .. அன்று மாலை வரை அவரைப்பற்றிய சிந்தனை மட்டுமே இருந்தது .. அன்று மாலை 6 மணி இருக்கும் வந்தார் நான் ஆடியது சரி இல்லையா என்றேன் .. ஆடுறே அதுல ஒழுங்கு இல்ல ..  சொல்லிட்டு வேட்டி மடிச்சு கோவணமா கட்டிட்டு ஆடுனாரு.. 
பிரமிப்பா இருந்திச்சு .. இந்த மனிதருக்குள் இவ்வளவு திறமையா .. தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்ய கூடாதென்று எனக்கு உணர்ந்தியது இந்த நிகழ்வு ..
எதிரியை அடிக்கிறது இல்ல..
நம்ம ஆடுன அவன் அதிரணும் திணறணும் என்ன செய்ய போறான்னு முழிக்கணும் ஆடுறதிலும் அழகு இருக்கணும் .. அதே நேரம் எந்த ஒழுங்கையும் மீறாமலும் இருக்கணும் .. இது எதுவும் உன் ஆட்டத்தில இல்லைன்னாரு..
..
கண்ணு கலங்கிடுச்சு ஆசானே .. கட்டி பிடுச்சுகிட்டேன் .. ஆம் 
நம்மையும் அறியாமல் நம்மை சரி செய்வார்கள் சிலர்.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சொல்லி தருவார்கள் .. நம் திமிரை உடைத்தெறிந்துவிடுவார்கள் திறமையிருந்தும் அகந்தை இல்லாமல் அமைதிகாப்பார்கள் .. வாழ்வில் இப்படி நிறைய ஆசான்கள் உண்டு ...
நம்மை வழிநடத்த செப்பனிட சொல்லி தர ..
எளிய மனிதர்களாய் நம்மோடு இருப்பார்கள் தற்பெருமைகொள்ளாதவர்கள் ..  இவரும் என்னை செப்பனிட்டவர் தான்
..
#ஆசான்
..
ஆலஞ்சியார்

Thursday, April 6, 2023

ஆளுநர் ..
திரும்பவும் சர்ச்சைக்குரியவிதத்தில் பேசி நானும் இருக்கிறேன் என ஞாபகபடுத்துகிறார் .. தமிழ்நாட்டில் ஆளும் அரசிற்கெதிரான நிலைபாட்டை தொடர்ந்து செய்துவரும் ஆளுநர் ஜனநாயக சக்திகள் இணைந்து எதிர்க்கவேண்டும் .. சட்டமன்றத்திலேயே நேருக்கெதிரே பேசி ஓடவிட்டும் இன்னும் அடங்காத ஆணவம் , இனியும் பொறுப்பதற்கில்லை விரைந்து தெளிவான முடிவெடுக்கவேண்டியது அவசியம் 
..
பாஜக நாடளுமன்றத்தை எதிர்கட்சிகளை சந்திக்க திராணியற்று நிதிநிலை அறிக்கையை விவாதமின்றி நிறைவேற்றி கூட்டதொடரையே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாகிவிட்டது .. 56 இன்ச் மெலிந்து போனது .. ஊழல் செய்ய போட்டி போடுவது முடியாமல் போனதென பிரதமர் சொல்கிறார் ஆம் யாருமே ஊழல் செய்யவிடாமல் ஒட்டுமொத்தமாக பாஜகவே ஊழல் செய்கிறது .. மாபெரும் ஜனநாயக சபையில் "பொய்" ஊழல் எல்லாம் தடைசெய்யபட்ட சொற்கள் பேசமுடியாது .. ஊழலை ஒழிப்பேன் என்பதன் பொருள் இதுதான் போலும் .. இவர்கள் அனுப்பும் ஆளுநர்கள் சனாதனத்தை பின்பற்றும் மதவெறியர்கள்.. பேச்சு செயலும் பொது சமூகத்திற்கு கேடாகதான் அமையும் .. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எரிகிறதாம் .. மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் ஆளுநர் வெகுமக்களின் உணர்வை மதிக்காதவரை இனியும் வைத்திருப்பது நியாயமில்லை .. பண முதலாளிகளிடம் கையூட்டு பெற்றவனைப்போல பேசுவது அழகல்ல
..
மசோதாக்கள் நிறுத்திவைப்பதென்பது நிராகரித்ததாக பொருளாம் .. அரசியல் அமைப்பு தந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும்,  ஆளுநருக்கு தரும் நிதியை ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பிற்கு தருவதும் எந்கவகை நியாயம் .. ஆளுநருக்கென்ற அதிகாரவரம்பை சீரமைக்கவேண்டியதும் அதற்கு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டிய காலம் நெருங்கிவிட்டது ..  ஆளுநர் பதவி தேவையில்லை..,  மக்களால் தேர்ந்தெடுக்க அரசை செயல்படவிடாமல் முட்டுகட்டை போடுவதும் .. நாக்பூரின் சொல்கேட்கும் கிளிப்பிள்ளையாய், பார்ப்பன/சனாதன/பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் அரசிற்கு இடைஞ்சல் தருவதும் மட்டுமே  பிரதான வேலையாக செய்கிறார்கள் "தண்டசோறுகள் "
..
பொறுப்பற்ற பேச்சு, சட்டம் அறியாமல் உளறல், மக்களை இழிபடுத்தும், போராட்ட வடிவத்தை கேவலபடுத்தும் ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் .. 
அநீதிக்கெதிரான, மக்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியாவதை எதிர்த்து போராடியதை வெளிநாட்டு நிதியில் நடத்தபட்டதென ஆளுநர் சொன்னதற்கு ஆதாரத்தை தரவேண்டும் .. 
..
திறக்கபடாத கதவுகளில், சாதித்தே பழக்கபட்டவர்களுக்கு எளியவர்களின்
 "உயிர்வலி" போராட்டம் கொச்சையாக தான் தெரியும் .. தமிழ்நாடு முதலமைச்சர் தன் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் .. வழக்கம் போல் அதிமுக ஜால்ரா அடிக்கும் .. ஜனநாயக சக்திகள்/கட்சிகள் ஒருங்கிணைந்து ஆளுநருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் 
..
ஆட்டுக்கு தாடி எதற்கு ..
..
ஆலஞ்சியார்

Sunday, April 2, 2023

சஹர்..
இஸ்லாமிய கிராமங்களில் நோன்பு இரவுகளில் பக்கீர் வருகைகள் மிக மிக குறைந்தவரும் காலத்தில் வழுத்தூரில் பக்கீர்கள் சஹர் நேரத்தின் "துயில் எழுப்புதல்"
 செய்வது மதுரமான நிகழ்வாகிறது.. இது தேவைதானா நவீன வசதிகள் உண்டே, நள்ளிரவுநேரத்தில் அமைதியை கெடுக்க "தப்பொலி" ஓசை தேவைதானா என சில நவீன சித்தாந்திகள் கேட்க கூடும்,..
மெல்ல அழிந்துவரும் கலைவடிவங்களில் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று ..
..
இப்போதெல்லாம் பக்கீர்களை காண்பதறிதாய் போய்விட்டது .. பக்கீர் என்பதன் பொருள் கூட இன்றைய பக்கீர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் வேதனையான விடயம் ..
.. 
பக்கீர் எனும் பகீீீர் எனும் மூலச்சொல் (பாரசீகம்)  வந்தது தன் எல்லா தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சுகிற தன்மை அது ஆன்மீக தேவையாகவும் உலகளாவிய தேவையாகவோ இருக்கலாம்  என்பதிலிருந்தே அவர்கள் "துறவிகள் " அல்ல என பொருள் கொள்ளலாம் ..
..
தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா அவர்கள் எழுதிய ‘பக்கீர்’ கட்டுரையில்
பக்கீர் என்பவர் தன்னிடத்தில் யாதொரு சொத்தில்லாமலும், யாதொரு தொழில் செய்யக் கூட்டாமலிருப்பவனாகவும் அவனிடத்தில் ஒரு நாளுக்குப் போதுமான உணவும் முழு உடுப்பும் இருந்தால் அவன் பக்கீரல்ல” என்பது பொது வழக்கு.. பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் பக்கீரல்லர் என்பதையும், எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்பவர்களே பக்கீர் என்பதையும் இதன்வழி அறியலாம்” .. என்கிறார்
..
பக்கீர்கள் யாசகம் பெறுபவர்கள்  அல்ல அவர்களுக்கென்று பாரம்பரிய பெருமிதங்கள் உண்டு .. 
இஸ்லாமிய ஞான இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், பரிச்சியமும் கொண்டவர்கள். தொன்மையான இசைக்கருவிகளை இசைக்கக் கற்றிருப்பார்கள். பார்வையில், பேச்சில், கனிவு, நன்னடத்தை, பற்றற்றத் தன்மை, இசையில், இறைப்புகழில் தோய்ந்து விடுதல் நாடோடிக்குணம் அவர்களின் இயல்பு இவையெல்லாம் ஒருகாலகட்டத்தில் இஸ்லாமிய சமூக மலர்ச்சியில் தேவையற்றதாக அல்லது இஸ்லாம் எடுத்தியம்பாததென பேச்சு வர தொடங்கியதிலிருந்து எல்லாம் மாறிப்போனது 
..
சூபித்துவத்தை ஒருபுறமும்  இறைநேசத்தை மறுபுறமும் கொண்டவர்கள் மனிதகுலநேசத்தை கொண்டு எளிமை பரந்த நோக்கு சமய உணர்வு கொண்டவர்கள் ஆனால் காலபோக்கில் ஏக இறைவனுக்கு மாறுபடுவதாக சொல்லி இவர்களை இஸ்லாமிய சமூகத்தின் "நவீனர்கள்" மெல்ல புறக்கணிக்க தொடங்கினார்கள்
இவர்களின் உடை இஸ்லாமிய பொது சமூகத்திலிருந்து மாறுபட்டு பச்சை /வெள்ளை தலைபாகை கண்டமாலை பாசிமணி ஜிப்பா என மாறுபடுவதும் நாடோடி வாழ்வியலை கொண்டதும் இவர்கள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒடுக்கபட காரணங்களில் ஒன்றாகியது 
..
இன்றைக்கு மிகவும் புறக்கணிக்கபட்டவர்களாக பக்கீர்கள்
இருக்கிறார்கள் பழைய மரபுகள் புதிய  வழிதடங்களில் பயணிக்க முடியாமல் வாழ்வாதார நெருக்கடியால் பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள் .. அர்ப்பணிப்போடு கலைநயமிக்க இறைநேசபாடல்களில் ஒலித்து சமயநெறிகளை பின்பற்றிவந்த சமூகம் இஸ்லாமிய சமூகத்தாலேயே தேவையில்லாத நிலைக்கு ஆளாகி பக்கீர்கள் வரவும் குறைந்து போய்விட்டது ..
..
வழுத்தூர் தொன்மைகளை கைவிடாமல் காத்துநிற்பதில் பெருமிதம் தோன்றுகிறது .. இது நம்பிக்கையை எல்லாம் மீறி நல்ல கலைவடிவ நாடோடி தென்றல் வீசுவதை ரசிக்கவும் போற்றவும் துணை நிற்கவும் வேண்டியது கடமை ..
எல்லோரும் பக்கீர் ஆகிவிட முடியாது .. 14 நாட்கள் தவமிருந்து தலை முதல் பாதம் வரை ரோமங்களை நீக்கி இறைந்தவரை போல  சடங்குகள் செய்து கபனிட்டு அடக்க செய்யவேண்டும் .. சிறு துவாரத்தில் காற்று புக சில மணிதுளிகள் பீர்மார்களும் பக்கீர்களும் பைத் பாடி மீண்டும் தோண்டி எடுத்து  அவரை பக்கீர் ஆக்குவார்கள் .. இப்போதெல்லாம் "அடக்கம் " செய்யும் சடங்கு தவிர்க்கபடுகிறதெனும் பக்கீராக சில வரையறைகள் உண்டு .. இஸ்லாம்  ஏற்கிறதா என்ற கேள்வியும் இவர்கள் வாழ்வில் பெரும் நெருக்கடியைதந்ததென்றாலும் தமிழ்நாட்டில் பக்கீர்கள் வரவும் பெருக்கவும் பெருமளவில் குறைந்ததென்பதை மறுக்க முடியாது ..
..
மிகசிறந்த கலையோடு கூடிய வாழ்வியலை வாழ்ந்தவர்கள், நெறியோடும் புகழோடும் நல்ல குரலவளத்தோடும் ஞான பெருக்கோடும் வாழ்ந்த சமூகம் 
பக்கீர் சமூகம் .. இனி வரும்காலங்களில் ...?
..
ஆலஞ்சியார்