Friday, April 30, 2021

நல்ல தலைவர்..
பதவி வரும் போது பணிவு  வரவேண்டும் என்பதற்கொப்ப தன் தொண்டர்களுக்கு நல்ல அறிவுரைகளை  வழங்கி .. நீ முக்கியம் ,பத்தாண்டு  பட்ட கஷ்டங்களிலிருந்து நாடு பெறும் விடுதலையை கொண்டாட எண்ணுவது இயல்பு ஆனாலும் பெருந்தொற்றுகாலத்து கொஞ்சம் விலகி இருத்தல் அவசியம் என உணர்ந்து 
வீடுகளிலேயே இருந்து மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள் என்கிறார்.. கூடவே மாற்றுகட்சியினருக்கும் அறிவுரை வழங்கி நல்ல தலைவராய் நிமிர்ந்து நிற்கிறார்..
..
எல்லா கணிப்புகளும் ஸ்டாலின் தமிழக முதல்வர் என உறுதிசெய்கிறது .. நீண்டகாத்திருப்பிற்கு பின் வரும் விடியல்.. கடந்தகால தவறுக்கு வருந்தி மக்கள் தனக்கான தலைவனை தேர்வு செய்திருக்கிறார்கள் .. "இவன் முடிப்பான்"  என்ற பெரும் நம்பிக்கை .. அடிதொழுது புறவாசல் கடந்துவந்த களவாணிகளால் நாம் இழந்ததை எண்ணி வருந்தியவர்கள் இனியும் இந்த பொய்யர்கள் தொடர்ந்தால் நாடு "வடநாடாகிவிடும்" என சிந்தித்து நல்ல  முடிவை எடுத்திருக்கிறார்கள்.. அடுத்த தொகுதிக்கே தெரியாத  அரைகுறைகள் "முதல்வர்" இருக்கையை அசிங்கபடுத்தி வடவனுக்கு கைகட்டி நின்று தமிழர்களை தலைகுனிய வைத்த நிகழ்வு வரலாற்றில் தீராத கறை..
..
தலைவர் ஸ்டாலின் 
பண்பட்ட  தலைவராய் போர்குணம் கொண்டவராய், பகைவெல்லும் வீரராய், தயாளகுணம் கொண்டவராய், மக்கள் மீது தீராத காதல் கொண்ட நன்மணியாய், கடின உழைப்பும் நேர்மையும் நன்னெறி அரசியலும் இயக்கத்தை வழிநடத்தும் ஆற்றலும், கொண்டகொள்கையும் தெளிவும் உறுதியும், எது பகையென  வெளிப்படையாக அறிவித்து  போர் தொடுக்கும் துணிவும், தொலைநோக்கு  பார்வையும் 
கலைஞரின் நேரடி பயிற்சியும் பெற்ற பெருமைமிகு தொண்டராய், நாடும் நாட்டுமக்களும் நம்பும் நல்ல தலைவராய்  மிளிர்கிறார்..
..
கடும் உழைப்பு திராவிடப் பெருந்தலைவர்கள் களத்தில் இல்லை  ,சில விவரகேடுகள் திராவிடத்தின் அஸ்தமனம் என்றெல்லாம் எழுதி தங்கள் அரிப்பை சொரிந்துக்கொள்ள, முடிந்ததுபார் திராவிடத்தின் ஆட்சி என சிலர் கொக்கரிக்க, வாய்ப்பிருந்தும், புறவாசல் வழி இருந்தும், மக்கள் தரவேண்டும், களம் கண்டு வென்றதாய் இருத்தல் வேண்டும்  மக்கள் அன்பை பெற்றதாய் தகுதியுள்ளவனை தேர்ந்தெடுத்ததாய் மக்கள்  மகிழவேண்டும், நேர்மையோடு எதுவும் கிட்டியதாய் வேண்டும் அதுவே சிறப்பு, வரலாற்றில் புகழப்படும் என  காத்திருந்து களம்கண்டு பெரும் வெற்றியோடு வருகிறார் தங்கதளபதி
..
இனி  ..
இழிவு நீங்கும்
துயர் துடையும் , நல்லாட்சி நம் ஆட்சி, நானிலம் போற்றும் திராவிட  ஆட்சி மலரும்..
காலம் தந்த தலைவனை கொண்டாடுவோம்
#தலைவர்_ஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்

Wednesday, April 28, 2021

இந்தியா சுவாசம் கேட்கிறது..
திறமையற்றவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டு உயிர்வளிக்காக (ஆக்சிஸன்) மக்கள் சுவாசமுட்டுகிறார்கள்..
சென்ற ஆண்டே பிப்ரவரியில்  இந்தியா கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்தும் கும்பமேளா நடத்தி உயிர்பலிக்கு காரணமாகியிருக்கிறது இந்தியா .. கொஞ்சம் கூட  வெட்கபடவில்லை தாங்கள் செய்தது மாபெரும் பிழை என்று கூட நினைக்கவில்லை இப்போதும் திமிராக பேச முடிகிறது இந்த குரங்கு புத்திகாரர்களால்.. இந்திய  ஊடகங்களின் வேசித்தனம் உலக நாடுகள் முன் கிழித்தெறியபடுகிறது .. அவசரநிலை காலத்தில் கூட நிமிர்ந்துநின்றவர்கள்  மூர்ச்சையாகி கிடக்கிறார்கள் அனைத்து ஊடகவியலாளர்களும் கள்ளமௌனம் காக்கிறார்கள் 
இந்த அவலநிலைக்கு முக்கிய காரணமான ஊடகங்கள் மனசாட்சியோடு இனியேனும் உண்மைகளை வெளியிட்டு இந்த அரசை தூக்கியெறிய போராடவேண்டும்.. பேனாமுனை
சரித்திரத்தை உருவாக்கும் ஆற்றல்  கொண்டது .. 
இனியேனும் செய்வார்களா..
..
கொலைக்காரர்களும் மதவெறியர்களும் மனித மாமிசத்தை உண்போரும் இந்தியாவை மெல்ல கொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. அகோரிகளை சாமியார்களை கட்டுபடுத்த கெஞ்சவேண்டியிருக்கிறது பிரதமரால்.. எவ்வளவு  இழுக்கு .. சாமியாரை முதல்வராக்கியதின் பலன் அவன் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் தயார் செய்கிறான் மாட்டுக்கு கொரோனா வராமல் இருக்க முககவசம் அணிவிக்கிறான் .. மனித  உயிர் மயிருக்கு சமமென எண்ணி திரிகிறான் .. சென்றாண்டு குழந்தைகளை உயிரை காப்பாற்ற சொந்த செலவில் ஆக்சிஸன் வாங்கிய மருத்துவர் கபீல்கானை தேசிய பாதுகாப்பில் அடைத்த போது மனிதநேயமுள்ளவர்கள் எங்கே போனார்கள். கொஞ்சமும் இரக்கமில்லாத செயலை அரசு செய்கிறதே என நீதிமன்றம் கேள்வி கேட்டதா.. கிரிஜாவுக்கும் அர்னாப்பிற்கும் வேகமாக கதவை திறந்த நீதிமான்கள் அப்போது அமைதிகாத்தார்களே அன்றே  உயிர்வளி(ஆக்சிஸன்)  பற்றாக்குறை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை..
..
ஜோர்டான் நாட்டில் ஏழுபேர் உயிர்வளி கிடைக்காமல் இறந்ததற்காக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்கிறார்
இந்திய ஒன்றிய அரசின்
சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு மன சாட்சி என்று ஒன்று இருந்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போன நிலையில் தனது பொறுப்பற்ற தன்மைக்காக பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.. 
இந்திய அரசு முழுவதுமாக தோல்வியடைந்து  நிற்கிறது.. முஸ்லிம்களை ஒடுக்கவேண்டும் என்பதிலேயே சிந்தனையை செலவிடும் முட்டாள்கள்  நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவதில்லை.. 
..
Dr.மன்மோகன் சிங்
It will be a disaster if Modi becomes PM of India,'  மோடி இந்தியாவின் பிரதமரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும், ' என்றார்..
படித்த திறமையான நல்ல  நிர்வாகியை  புறக்கணித்து 
குஜராத்தில் குருதியில் விளைந்த நஞ்சை நாம் கொண்டாடியதின் விளைவு இன்று இந்தியா அனுபவிக்கிறது .. வாய்பந்தல்  போடும் முட்டாளின் கையில் தேசம் படாதபாடுபடுகிறது .. மதவெறிகளும் பிணந்திண்ணிகளும் நாடாண்டால் என்ன நடக்கும் என்பதை இந்தியா உணர  தொடங்கியிருக்கிறது ..
இதுதான் இவர்கள் சொல்லும் #ராமராஜ்ஜியம்
எழுபதாண்டுகள் காங்கிரஸ் செதுக்கியதை இந்த நவீன கோமாளி ஏழே வருடத்தில்  உடைத்தெறிந்தது நாடு கவலையோடு பார்க்கிறது ..
..
கடவுளோ மதமோ மாட்டுசாணியோ மூத்திரமோ பிணியை நீக்காது ..அறிவியல் கொண்டே சாதிக்க முடியும் .. புராணமும் புரட்டும் போலிகளை உருவாக்கும்.. பகுத்தறிவே நன்மை பயக்கும் அறிவை தரும் 
எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தரும் .. இதை ஆள்வோர் புரிந்து கொண்டு மூடவழக்கை இனியும் பின்பற்றாமல் கைதட்டு விலக்கேற்று என பீற்றாமல் 
தடுப்பூசியை எல்லோருக்கும் கிடைக்க , உயிர்வளி தடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் .. 
..
ஆலஞ்சியார்

Saturday, April 24, 2021

ஆக்ஸிசன் தட்டுபாடில்லாத மாநிலங்கள் தமிழ்நாடு கேரளம்..
இரண்டுமே பாசிச  பாஜகவை  ஓரங்கட்டி வைத்திருக்கிறது.. 
நாட்டின் பிரதமரை  தேர்வு செய்வதில்  தோற்றுப்போயிருக்கிறது தேசம் .. 
ஒரே இரவில் பணமதிப்பிழப்பு செய்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவரை கேரளமும் தமிழகமும் புறங்கையால் தள்ளி நிறுத்தியது பாருங்கள் அங்கே இருப்பது தெளிவு..
வடமாநிலம் சுயம் சிந்தனை இழந்து ராம் ராம் என கோஷமிட்டு மதப்பற்றை/வெறியை அரசியலில் கலந்து கோவில் போதும் என்று எண்ணியதால் வந்த வினை இன்று மூச்சுதிணறுகிறது.. 
..
உயர்/உச்சநீதிமன்றங்கள் கேள்வி எழுப்புகின்றன் ஆனால் அவை நீதிமன்றங்கள் தானா? என்ற கேள்வி எழ  தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது..  கட்டபஞ்சாயத்து செய்ய தொடங்கியும், பதவிகாலம் முடிந்து கனிவான காத்திருப்பாகவும் பாதைமாறிப்போய் குழிதோண்டி புதைக்கபட்ட நீதிகள் ஏராளம்.. மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை மாட்டுக்கு ஆம்புலன்ஸ் என்றபோதே கொட்டிருக்கவேண்டும் நீதியை நிலைநாட்டுவோர்.. இன்று படுக்கைகள்  காலியில்லை ஆக்ஸிசன் காலியில்லை ஏன் இதுவரை  பாஜக ஆண்ட மாநிலங்களில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை என கேள்வி கேட்க யாருமில்லை
கேட்டால் சிறை மீறி பேசினால் சுட்டுக்கொல்வோம், கொன்றவனை வெளியிலெடுப்போம் மாலை மரியாதையோடு வரவேற்போம் நீதிபதிகள் விடுவிக்க மறுத்தால் கொல்வோம் விடுவித்தால் கவர்னர் பதவி கிடைக்க  ஏற்பாடு செய்வோம் .. குண்டர்கள் கொலையாளிகள் கற்பழித்தவன் அமைச்சராகலாம் இதுதான் நவீன இந்தியா..
..
கேவலமான இருக்கிறது ..
வாய்பந்தல் போடும் பிரதமர் அவர்களே உலகமே உற்றுநோக்குகிறது .. இந்தியா எனும் தேசம் இப்படி திறமையற்ற மூடர்கள்  கூட்டத்தில் சிக்கி  சீர்குலைந்து நிற்பதை, பொய் பேசியும் பிரதமரை, மதவெறி தூண்டும் ஆட்சியாளர்களை, மனிதனை விட  மாட்டை நேசிக்கும் மகாமடையர்களை கொண்டிருப்பதை உலகமோ கவலையோடு பார்க்கிறது .. ஆக்ஸிசன் தேவைக்கு உதவ உலக நாடுகள் வரிசையில் .. பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாநில தேர்தலில் எப்படி தில்லுமுல்லு செய்யலாமென கூட்டுசதிக்கு  ஆலோசனை செய்கிறார்கள் ..
மார்ச் மாதமே கொரோனா 2.0  தாக்கம் தெரிந்த போதும் தேர்தலை விரைந்து முடிக்காமல் காலந்தாழ்த்தி பரவல் அதிகமாகிய போது பரப்புரையில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கலந்துக்கொண்டு நாடு எக்கேடு கேட்டால் என்ன ? என பொறுப்பற்றத்தனம் .. கைமீறிபோன பிறகு தொலைகாட்சி தரிசனம் நான் கூட இருக்கிறேன் என வசனம் பேசினால் போதும் .. உயிர்காக்கும் மருந்திற்கு GST  போடும் அயோக்கியத்தனம் மொத்தத்தில் முட்டாள்கள் மதவெறியர்கள் கையில் நாடு சிக்குண்டு இன்று கண்ணீர் வடிக்கிறது .. நாட்டின் வளங்களை இரு பெரும்  முதலாளிக்கு தாரைவார்த்துவிட்டு அதற்காக தொடர்ந்து நாட்டுமக்களை  வஞ்சித்து வரும் கேடுகெட்ட அரசு .. அமைச்சர்கள் அறிவுசார்ந்து சிந்திப்பதில்லை நான் வெங்காயம் தின்பதில்லை அதனால் அது விலை ஏறினால் கவலையில்லை என்கிற அறிவிலிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் மகாமுட்டாள் பிரதமர் கையில் நாடு சிக்கி தவிக்கிறது..
..
தொலைநோக்கு திட்டமில்லை 
கல்வியறிவை விட சாதிமதவெறி கைக்கொடுக்கும்  என்று நம்புகிற மூடர்கூட்டம், தேர்தல் அரசியலுக்காக
மக்களை  பிரித்து வன்முறையை கையிலெடுத்து அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி நீதியை மிரட்டி  அல்லது விலைக்கு வாங்கி, அதையும் மீறி எதிர்கட்சிகள் ஜெயித்தால்  எம்எல்ஏக்களை கடத்தி மிரட்டி  விலைபேசி ஜனநாயகத்தை குழிதோண்டி  புதைக்க தெரிந்தவர்கள் நாட்டை
நாட்டுமக்களை எப்படி  கவனிப்பார்கள்  .. 
..
இந்த நாட்டிற்கு  தன்னலமற்ற சாதி மதமற்ற, சுயபெருமை பேசாத, தொலைநோக்கோடு சிந்திக்கிற மக்களை கல்வியிலும், வாழ்க்கை தரத்திலும் உயர்த்த நல்ல திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தும் தலைவர்கள் தேவை .. 
ஆம்..
அச்சம் தவிர்ப்போம் 
அறிவியலால் வெல்வோம் என துணிவோடு செயலாற்றும் தலைவர்கள் ..  இனியும் மதவெறியர்களை கோவில் கடவுள்  புராணம் என பழமை பேசி மக்களை பிரித்தாளும் குறைமதியாளர்களை விரட்டியடித்து நன் மக்களை நல்ல தலைவர்களை கொண்டாட வேண்டும் .. பாசிச பாஜகவால் நாடு குட்டிசுவரானதுதை கண்டோம் .. இனியும் விழித்துக்கொள்ளாவிடில் உலகில் மிகவும் மோசமான  ஏழைநாடாக மாறும் ..
..
கொரோனாவை விரட்ட கைதட்டுவதாலோ  விளக்கேற்றி மணியடிப்பதாலோ கோ கொரோனா என பஜனை பாடுவதாலோ போய்விடாது .. அறிவியலை கொண்டே வெல்லவேண்டும் .. உயிர்காக்க மாட்டு சாணியும்  மூத்திரமும் (கோமியம்) குடித்தால் உயிர்போகும் ..மாறாக தடுப்பூசி போட வேண்டும் புலால் உணவை உண்ணவேண்டும், அறிவியலால் தான் முடியும்..
..
ஆரிய சித்தாந்தம் நாட்டிற்கு தேவையில்லை..
திராவிட  சித்தாந்தமே மனிதநலனுக்கானது நாட்டு தேவையானது ..நாட்டின்  வளர்ச்சிக்கானது.. கடைசியாக பண்டாரங்கள் ஆண்டால் நாடு கெடும்.. பகுத்தறிவாளர்களால் தான் நாடு மிளிரும்..
..
ஆலஞ்சியார்

Thursday, April 22, 2021

வாழ தகுதியற்ற நாடா எனது நாடு..
இந்திய ஒன்றியம் காங்கிரஸ் பேரியக்கத்தின் செயல்பாட்டால் எத்தனை வளர்ந்திருந்தது .. அறிவாளிகளை தன்னோடு  வைத்திருந்தார் .. அபுல்கலாம் ஆசாத் தவிர்த்து என்னால் வேறோருவரை கல்வியமைச்சராக நினைக்கமுடியவில்லை என்றார் நேரு.. இப்போதும் பெரிதும் உதவும் மருத்துவ கட்டமைப்பெல்லாம் காங்கிரஸ்  செய்தது தான் மூன்றுமுறை முதல்வராக இருந்த மோடி செய்ததெல்லாம் மதவெறியை தூண்டி கலவரம் கண்டதுதான் .. நவீன இந்தியா என வாய்சவடால் விட்ட  மோடியின் முகம் கிழிந்து தொங்குகிறது.. 
ஆக்ஸிசன் இல்லாமல்  உயிர்போகிறது.. திருடுங்கள் அல்லது பிச்சையெடுங்கள் என  உயர்நீதிமன்றம் சொல்லும் அவலம்.. ஆம் தமிழகத்திலிருந்து மாநில அரசிற்கு தெரியாமல் திருடுகிற அவலம்
..
மதவெறி அரசியலை கையிலெடுத்த கர்நாடக நிலை பரிதாபம்,
"நிலைமை கையை மீறி விட்டது. எங்களால் எதுவும் செய்ய இயலாத நிலைக்கு நாங்கள் வந்து விட்டோம்"  நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..
உ.பியில் மிக மோசம் சாலையில் பிணங்களின் வரிசை .. ஒளிரவில்லை பிணங்களால் பற்றி எரிகிறது இந்தியா..  
நானிருக்கிறேன் என தொலைக்காட்சியில் பேசினால் போதுமா.. செய்தியாளர்கள் சந்திக்க தைரியம் உண்டா .. 
ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன் என்றெல்லாம் மெழுகபட்ட பிம்பம் இன்று உருகுலைந்துப் போய்நிற்கிறது.. இன்றைய அவலநிலைக்கு ஊடகங்கள் மிகப்பெரிய  காரணம் ..  மன்மோகன்சிங்கை  வீழ்த்த எண்ணியது  எவ்வளவு பெரிய  தவறென்பதை இப்போது உணருகிறார்கள் .. மோடி தேசிய பேரிழிவு என்றார் மாண்பிமை மன்மோகன்சிங் எத்தனை உண்மை.. 
..
தமிழகம் மருத்துவத்துறை சாதித்தைப்போல்  வேறெந்த மாநிலமும் சாதிக்கவில்லை ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை ராஜீவ்காந்தி மருத்துவமனையை உருவாக்கியவர் கலைஞர் .. உலகில் 8 வது  அதிகபடுக்கைகள் கொண்ட மருத்துவமனை  இதெல்லாம் தமிழகத்தில் திராவிட ஆட்சியின் சாதனை .. தேவையான ஆக்ஸிசனை தயாரிக்கும் ஆற்றல் கொண்ட  மருத்துமனை 
இந்த பேரிடர் காலத்தில் தொலைநோக்கோடு சிந்தித்து  கட்டமைத்த #கருணையாளன்_கலைஞரை நினைத்து பார்க்கிறோம்..
..
முழுவதுமாக தோற்றுநிற்கிறது திறமையில்லாத அரசன் .. ஆணவத்தோடு பதில் தரும் மந்திரிகள் .. கைதட்டுங்கள்  தீபமேற்றுங்கள் கோ கொரோனா என இசைபாடுங்கள் என அறிவுரை சொல்லும் அறிவிலிக்கூட்டத்தின் தலைவன், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என அகங்காரத்தோடு பதில் சொல்லும் ஆரிய திமிர் .. மக்களைப்பற்றி சிறுதும் கலலைபடாமல் மாட்டிற்கு முககவசம் மாட்டும் குரங்குகள், கைமீறி போன பின் மன்னிப்பு கேட்கும் மடையர்கள்..  ₹3000 கோடிக்கு சிலை வைத்தால் போதும்  மருத்துமனைக்கு ஆக்ஸிசன் வாங்க தேவையில்லை  சொந்த காசில்  வாங்கி மக்களை குழந்தைகளை காப்பாற்றினால் தேசதுரோகி வழக்கு ..  நாம் எந்தமாதிரி நாட்டில் வாழ்கிறோம்..
மிக  கேவலமானவர்கள் கையில் நாடு  ..
..
மன்மோகன் சிங் போன்ற தன்னலமற்ற நாட்டை நேசிக்கிறவர்களை வேண்டாமென வைத்து குஜராத் மாடலென ஊடகவியாபாரிகள் கொண்டாடிய அடிமுட்டாளை கொண்டுவந்ததின் பலனை மக்கள் அனுபவிக்கிறார்கள்.. இப்போதும் வாய்சவடாலுக்கு பஞ்சமில்லை.. செத்துவிழுவது மனிதர்கள் தானே மாடு இல்லையே..
..
"நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்"..
என்றான் வள்ளுவன்..
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்..
..
ஆலஞ்சியார்

Tuesday, April 20, 2021

பெரியார் போதும்

அம்பேத்கர் போதும் பெரியார் வேண்டாம் என்கிறவர்கள் மிக ஆபத்தானவர்கள்.. தமிழகத்தில் அம்பேத்கரை தவிர்த்து அரசியல் செய்திட முடியும்.. ஆனால் பெரியாரை பேசாமல் அரசியல் இல்லை .. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொன்னால் அம்பேத்கர் இங்கே தேவைபடவில்லை காரணம் பெரியார் தனது பணியை சரியாக செய்திருந்தார்..  தலித் அரசியலோடு முடிந்துபோகிற விடயம் மட்டுமே,பொதுநதியில் இணைய முடியாது ..இங்கே சமத்துவம் என்கிற சொல் செயலில் உண்டு ..விரும்பதகாத சில செயல்களை தவிர்த்தால் இங்கே திராவிடம் என்ற சுவர் காத்துநிற்கிறது .. பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்பது சமநீதிக்கான தொடக்கம் இங்கே பிற சமூகமக்களை ஒருங்கிணைக்கும்.. ஆரியம்/ திராவிடம் என பிரித்து தெளிவான களம் அமைத்தது, அதை தலித்  தலித்தல்லாதோர் என திசைதிருப்பல் ஆபத்தானது ..
தமிழகத்தை பொருத்தவரை தலித் மக்களுக்கு பெரும் பாதுகாப்பை தந்தது பெரியாரிய சிந்தனைதான்.. பெருந்தனக்காரராய் பிறந்து சாமானியர்களின் துயரை கண்டு வருந்தி அவர்கள் சமூகத்தில் நடத்தபடும் விதம் கண்டு ஆத்திரம் கொண்டு இந்த சனாதன கட்டமைப்பை அடித்து நொறுக்க பெரும் பயணம் செய்தவர் தந்தை பெரியார்.. இங்கே அம்பேத்கர் தேவைபடாமல் போனதற்கும் பெரியார் என்ற பெருஞ்சுவர் காத்துநின்றதும் காரணம் .. மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியதில் பெரியாரின் பணி யாராலும் ஈடுசெய்ய முடியாதது ..
இங்கே சில நீலசங்கிகள் பெரியாரை தவிர்த்து பேச வருவதின் பின்னில் பாசிசத்தின் பிடி இருக்கும் .. தலித்மக்கள் விடுதலை என்பது அதற்கான தீர்வை அம்பேத்கர் இறுதிஉரையில் சொன்னது தான் "இந்துவாக சாக விரும்பவில்லை" ..
தலித்களை பாதுகாக்க வன்கொடுமை தடுப்புசட்டம் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் தண்டிக்கபட்டவர்கள் 2% விழுக்காடு கூட இல்லை .. சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தள்ளுபடி செய்யபட்டதுதான் உண்மை .. 
..
திராவிட கழகத்தை சிலர் எதிர்க்க செய்கின்றனர் .. பார்ப்பனர்கள் எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை ஆனால் தலித்கள் அதை செய்யும்போது நாம் இடைமறிக்க வேண்டியிருக்கிறது .. அம்பேத்கர் போதும், ஏன் அம்பேத்கர் சாலை இல்லை என்ற கேள்விகள் அவர்களின் அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது .. பிறந்த மண்ணில் அம்பேத்கர் பெயரில் கல்லூரி அமைக்கவே முடியாத சூழலில் இங்கே சட்டகல்லூரி அமைத்ததும் சட்ட பல்கலைக்கழகம் கண்டதும் பெரியாரின் துணைக்கொண்டுதான் .. பெரியாரிய சீடர்களால் தான் முடிந்தது இங்கே எந்த எதிர்ப்பும் வராமல் போனதற்கு பெரியாரிய சிந்தனைகளை ஏற்ற சமூகம் தமிழகம் கண்டிருந்ததே காரணம்
..
பெரியாரை ஏற்று வந்தவர்கள் சாதி சமயத்தை புறக்கணித்தவர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர் ஆனால் சுயசாதி பேசும் மூடர்கள் தான் எங்களுக்கு இவர் போதும் இவர் தேவையில்லையென நவீன புராணம் பாடுகின்றனர்.. நீலசங்கிகள்
அருந்ததியர் புதிரை வண்ணார் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாதவர்கள்.. (ஆனால் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்திற்காகவும் குரல் கொடுத்ததோடு அல்லாமல் தீர்வை கண்டது பெரியாரியம் பேசும் திராவிட இயக்கம்தான்)
இவர்கள் அழுக்கானவர்கள், சுயம் தெளியாதவர்கள் .. 
பிணத்திற்கு வீரமணி என பெயர்வைத்து பார்பனர்கள் சுமந்து சென்றதெல்லாம் தெரியாதவர்கள் ஆசிரியரை வசைபாடுகிறார்கள் .. இனியும் அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்து பேசுவது தேவையில்லைதான் .. பெரியார் போதும்.. நவீன நீலசங்கிகள் வெகுவிரைவில் உணருவார்கள் அம்பேத்கரை தேசிய தலைவர் என்பதலிருந்து தலித் தலைவராக சுருக்கவேண்டுமென்ற ஆர்எஸ்எஸின் செயல்வடிவம் இவர்கள் .. ஆம் இவர்கள் ஆர்எஸ்எஸின் #அட்டைக்கத்திகள்
நாம் அண்ணலை தேசிய தலைவராக பார்க்கிறோம் அவர்கள் தலித்களுக்கான தலைவர் என்கிறார்கள் ..தலித் சமூகத்தில் பள்ளர் சமூகம் அம்பேத்கரை கண்டுக்கொள்வதில்லை என்பதும் கவனிக்கதக்கது..
..
பார்ப்பனர் / பார்ப்பனரல்லாதோர்  என்ற அரசியல்தான் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே  வழிகாட்டும்,
நலதாய் அமையும்.. 
இங்கே பெரியார் போதும் ..
..
ஆலஞ்சியார்

Sunday, April 18, 2021

நீலம்..
இங்கே அம்பேத்கரை முன்னிறுத்துவதில் தவறில்லை ஆனால் அம்பேத்கரை மட்டுமே முன்னெடுப்போம் என்போரை கொஞ்சம் தள்ளியே வைக்கவேண்டும்.. அம்பேத்கர் மீது நமக்கு மரியாதை உண்டு ஆனால் சமூக புரட்சியை செய்திட முடிந்ததா என்ற கேள்வி எழும் போது மௌனம் பதிலாய் வரும் .. தாழ்த்தபட்ட மக்களை அவர் முன்னேற்றபாதைக்கு கொண்டுச் செல்லவேண்டுமென்பதில் அக்கறை கொண்டவர்தான் ஆனால் வடமாநிலங்களில் அவர்கள் நிலை இப்போதும் எப்படி இருக்கிறதென்பதை காட்சிகள் நமக்கு சொல்கிறது..
..
வெகுமக்களிடத்தில் அவரது பயணம் இருந்ததா .. மக்களை புரட்சிபாதையில் தயார்படுத்தினாரா .. இடஒதுக்கீடு மட்டுமே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தவர் அவர்களை isolation லிருந்து வெளியேற என்ன தீர்வு கண்டார்  அதை பின்பற்ற யாருமே முன்வருவதில்லை.. தீண்டாமை "பாவசெயல் " படித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வி தொடர்ந்து நம்மை துரத்துகிறது..
..
இங்கே சிலர் பெரியாரை தவிர்த்து புரட்சி பேச வருகிறார்கள் .. அம்பேத்கரை மட்டுமே பேசுவோம் என்போரை கவனமாக கூர்ந்து கவனியுங்கள் அவர்கள் பாசிசத்தின் செல்லப்பிள்ளைகள் .. பெரியாரை மறுத்து இங்கே குறிப்பாக தமிழகத்தில் எதுவும் நடக்காது .. பெரியாரை பிற்படுத்தபட்ட மக்களின் தலைவர் என்ற குறுகிய வட்டத்தில் அடைக்க நினைப்பது கூட சரியானது அல்ல.. அவர் மானுட புரட்சியாளர்.. ஒடுக்கபட்டமக்களை மட்டுமல்ல பார்ப்பனீயத்தால் பாதிக்கபட்ட உரிமைகள் மறுக்கபட்ட அனைவருக்குமானவர் .. அவர்கள் மக்களை சமூகபுரட்சிக்கு ஒருங்கிணைத்தார் .. சுயமாக சிந்தையை வளர்க்க சொன்னார்
அறிவுக்கொண்டு பார் என்றார் .. படிப்பு வராதுன்னு சொன்னவன் முன்னால படித்து முன்னுக்கு வந்துகாட்டு என்றார்.. சமூகத்தின் இடைவெளியை வெகுவாக குறைத்தார் .. அதனால் தான் தலித்கள் மீதான தாக்குதல்கள் இங்கே வடமாநிலங்களை விட குறைவாக பதிவாகிறது.. அது கூட சில சாதிவெறியர்களின் தூண்டுதலாலேயே நடத்தபடுகிறது.. 
..
திாவிடத்தை வீழ்த்தவேண்டும் அல்லது திராவிடம் என்ன செய்தது என சில நீலசங்கிகள் பரப்புரை செய்கிறார்கள் .. படிப்பும் கலையும் உனக்கில்லை என்ற பார்பனீயத்தை உடைத்து படிப்பு எல்லோருமானதென நீதிக்கட்சி காலத்திலேயே முன்னெடுத்து இன்று கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்
ஒரு சேதி போதும் .. 1904.ல் சென்னை மகாண சபைக்கு எதெல்லாம் தேவை என்பதை பரிந்துரைப்பதற்காக சென்னை விக்டோரியா ஹாலில் நடந்த கூட்டம் தஞ்சை ராமமூர்த்தி அய்யரெல்லாம் கலந்துக்கொண்ட சபையில் அயோத்திதாசர் மூன்று கோரிக்கைகளை வைத்தார்.. கோவிலுக்கு எங்களையும் அணுமதியுங்கள் என்ற முதல்கோரிக்கை உடனே தஞ்சை அய்யர் அதுதான் உங்களுக்கு தனி கோவில் உள்ளதே இதில் எல்லாம் வரகூடாது ஆகமவிதிப்படி தவறு எனச் சொல்லிவிட்டு இதை ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன்இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கு தரும் பதிலையும் ஏற்க வேண்டும் என்றார் ..இரண்டாவது  கோரிக்கை எங்கள் குழந்தைகளை நான்வது வரையிலாவது படிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் .. அதற்கு பிறகு பிரச்சனையாகி அயோத்திதாசர் வெளியேற்றபட்ட வரலாறெல்லாம் படியுங்கள்..
..
ஐம்பதாண்டு கழித்து ஏறக்குறைய அதே கோரிக்கையோடு (எங்கள் பிள்ளைகளை நான்காவது வரை) சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் அன்றைய முதல்வர் ராஜகோபாலச்சாரியரிடம் வைக்கபட்டபோது  அவர் என்ன சொன்னார் தெரியுமா .. துறை ரீதியாக கேளுங்கள் சவுக்காரம் துவைக்க படித்துறை தண்ணீர் என கேளுங்கள் என பேசியதெல்லாம் வரலாறு .. இடையில்  நீதிக்கட்சி ஆட்சியில் அனைவருக்கும் கல்வி என்றால்தான் இனி பள்ளிகளுக்கு அனுமதி என்று அரசாணை 1924 ல் வந்தது தாழ்த்தபட்டவர்களை தனியே அமர வைக்கிறோம் அனுமதி தாருங்கள் என்ற போது அனுமதி மறுத்தது நீதிக்கட்சி என்பது வரலாறு ..
..
இன்றைக்கு பெரியார் வந்தபிறகு தான் அதிலும் திராவிடம் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சமூகநீதி நிலைநாட்டபட்டதும், இன்றைக்கு கருத்துசுதந்தரம் என்ற பெயரில் சிலர் வந்து உளறவும் முடிகிறது..
பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்றைய குஜராத்தை போலதான் இருந்திருக்கும் .. வடமாநிலங்களைப்போல தலித்கள் வேட்டையாடபட்டிருப்பார்கள் .. சுயமரியாதையோடு சுரணையோடு மானத்தோடு வாழ வழிசெய்தது திராவிடம்..
..
நன்றி! திராவிடப் பெருஞ்சுவராய் காத்துநின்ற எம் தலைவர்கள் 
பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா பேரருளாளன் கலைஞர்..
..
ஆலஞ்சியார்

Saturday, April 17, 2021

விவேக்

விவேக்..
வடிகர் என்பதை தாண்டி அவருக்கென்று சில முகங்கள் இருந்தன.. நல்லதை செய்யவேண்டும் நம்மால் முடிந்தளவு விழிப்புணர்வை பரப்புதல்,என ஒரு சமூகபார்வை அவருக்கிருந்தது .. நகைச்சுவையோடு எதைச் சொன்னாலும் பொல்லாப்பு வராதென்ற உண்மையை உணர்ந்திருந்தார் .. மக்களை மகிழ்விப்பவன் சற்று கோமாளியாக இருப்பது நன்று.. 
நகைச்சுவை சிறந்த மருந்து அதை தொடர்ந்து செய்வது சமூகத்தில் நல்ல பலனை தரும்..
சிலவரிகளில் உண்மையை உரக்கச் சொல்லிவிடலாம்.. 
அவா வேற வர்ணம்..
அவாளு வரணும் என்பார்  நகைச்சுவையோடு கூடி பேரிடியாய் இறக்கிவைப்பார்..
..
அவருக்கு சாதி இருந்தது மதம் கூட ஆனால் அதன் பிடியில் சிக்குண்டு மதியிழக்கவில்லை சிலநேரம் கேடயம் அது முடிந்த பிறகு தூக்கியெறிதல் நல்லதென்ற அறிவிருந்தது ..
எங்கோ அவர் சறுக்கியிருக்க வேண்டியவர் நிதானித்து தவிர்த்து தன் களப்பணியை அக்கறை காட்டி மறுவடிவம் பெற்றார்.. மரம் நடல் இந்த மண்ணிற்கு நீ செய்யும் நன்றிகடன்.. வரும் தலைமுறைக்கு நீ செய்யும் பேருதவி.. அதை தொடர்ந்து செய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்..
..
கலைஞர் அவர்களால் "சின்னகலைவாணர் " என அழைக்கபட்டவர்.. ரிஷியிடம் பெற்ற வரம் அது..சமூக பார்வையோடு கூடிய எண்ணங்கள் மூடநம்பிக்கைகளை அவர்பாணியில் கிண்டல் செய்து மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தல் அதற்கு நகைச்சுவை பேராயுதமாய் இருந்து காத்தது ..
அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் அதை வெளிகாட்டிக் வெறிக்கொள்ளவில்லை மூடங்களை விமர்சிக்கும் தைரியம் இருந்தது .. பசியும் வறுமையும் படிப்பினை தரும் ஆசான்கள் என நம்பியவர்.. 
..
ஒரேயொரு நிகழ்வு போதும்.. துன்பபடும் போது தோள்நிற்பது தேவையறிந்து உதவுவது அதை வெளியில் சொல்லாமல் காப்பது.. விவேக் நல்ல மனிதர் இதை மரியாதைக்குரிய நடிகர் குமரிமுத்து சொல்வதை கேட்டால் புரியும் தன் மகள் திருமணத்திற்காக நாடகத்தில் நடித்து வந்த தொகையை முழுவதுமாக தந்து பேருதவி செய்தவர் .. சின்னக்கலைவாணர் என சொன்னதன் பொருள் இப்போது புரியும்..
..
போய்வாருங்கள் விவேக்..
காலம் நினைவில் கொள்ளும்
..
ஆலஞ்சியார்